ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே.15 முதல் 26ம் தேதி வரை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


பொது கலந்தாய்வு:


தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.


இதற்காக ஏற்கனவே ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த சூழலில்  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது.


இந்நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.




 




 


 


அந்த அறிக்கையில் “பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அணைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் திருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


தற்போது இணைப்பில் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.