Annamalai Yatra: ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள பாதயாத்திரை விழாவில் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். 


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக:


கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.


ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, பிகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலவி வரும் அரசியல் சூழல் ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களில் சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.


குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான், தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழர்கள் பற்றியும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் என கூறியிருந்தார்.


பாதயாத்திரையை அறிவித்த அண்ணாமலை:


 இதற்கிடையில்,  பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்தார். ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அண்ணாமலை.  ராமேஸ்வரத்தில் தொடங்கும் பாதயாத்திரை 110வது நாளில் சென்னையில் நிறைவு செய்ய இருக்கிறது. இந்த பாதயாத்திரையின் போது, தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது,  தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.


இந்த யாத்திரை 5 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதலில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த யாத்திரையில் இவருடன் நடைபயணம் மேற்கொள்வதற்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


எடப்பாடிக்கு அழைப்பு: 


அண்ணாமலை பாத யாத்திரையை  ஜூலை 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க இருக்கிறார்.  இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கூட்டணி கட்சிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்னதான் இந்த இரண்டு கட்சிகளுக்கு கூட்டணியாக இருந்தாலும் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் உரசல்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எனவே இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.