சென்னை: ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் ECI பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.
இவர் , தனது 86 ஆவது பிறந்தநாளை , கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி கொண்டாடினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் வந்தவுடன் இறுதி சடங்கானது நடைபெறும் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராயர் எஸ்றா சற்குணம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு திமுக எம்.பிகளான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.