வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவிய வதந்திகள் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்ய வந்த பீகார் சிறப்பு குழுவினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய போலி வீடியோக்கள் பெரும் புயலை கிளப்பியது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கையில் களமிறங்கியது. வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியது, விழிப்புணர்வு ஏற்படுத்தியது, உதவிமையம் அமைத்தது என பதற்றமான சூழலை தணித்தனர். தவறான தகவலை பரப்பியது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்த ஆலோசனைக்குப் பிறகு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தடைந்தது.
அவர்கள் பல துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடர்பாக விசாரித்ததாகவும், இதில் பீகார் தொழிலாளர்கள் எந்த பிரச்னையும் இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக தெரிய வந்தது எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்ற குழு ஆய்வு மேற்கொண்டது.
பின்னர்,பீகார் குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “நேற்று காலை நாங்கள் 4 பேர் அடங்கிய குழு சென்னை வந்து சென்னை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயரதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பீகார் அசோஷியேசன் உறுப்பினர்கள், பல தொழில்களின் சங்கங்களின் உறுப்பினர்கள் என அனைவரையும் சந்தித்து பேசி விவரங்களை சேகரித்தோம்.
தொடர்ந்து இன்று காலை திருப்பூர் வந்து, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய் மற்றும் தொழிலாளர் நலத்துறை உயரதிகாரிகள், பல அமைப்புகளின் நிர்வாகிகள் என அனைவரையும் சந்தித்து பேசினோம். இதில் பங்கேற்றவர்கள் எங்களிடம் என்னென்ன தெரியப்படுத்த வேண்டிய தகவல்களை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து தொழிலாளர்களின் காண்டிராக்டர்கள், தொழிலாளர் சங்கங்கள் என அனைவரையும் சந்தித்து பேசினோம். இதன்மூலம் போலியான வீடியோக்கள் காரணமாக வடமாநில தொழிலாளர்களிடம் பயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் வதந்திகளை தடுப்பது, உதவி எண்கள் அறிவித்தது, வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, விழிப்புணர்வு ஏற்படுத்தியது என தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகவும் நடவடிக்கை எடுத்தது. இது எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது.அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தனர்.