கடந்த நவம்பர் 5ம் தேதி, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பின்னர் ரூ.130 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதனை தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பிரபல கோவில்களில் நேரலையில் கண்டு தரிசனம் செய்தனர். அதன்படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அமைக்கப்பட்ட பிரமாண்டத் திரையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார். அதே போன்று பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கேதார்நாத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மேம்பாட்டு திட்டங்களின் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோயிலினுள் அமர்ந்து பிரதமர் மோடி நிகழ்ச்சியை பார்த்ததை கடுமையாக விமர்சித்திருந்தார்.  ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை அரசு நடைமுறைபடுத்தியபோது வர்ணாசிரமத்திற்கு ஆதரவாக பேசிய இவரது பேச்சுக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இவரை அழைத்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுத்தன. அதற்கு முன்பும் பல்வேறு சமயங்களில் செய்திகளில் அடிக்கடி இவரது பெயரும் அடிபடும். ஸ்ரீரங்கம் நம்பெருமான் உற்சவர் சிலை மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.




கடந்த 6ம் தேதி அரசியல் கட்சிகள் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளே! என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கோவிலை பெருமிதமாக பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்ன அதே நாளில், ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி முன்பு இருக்கும் கருத்துரை மண்டபத்தை அரசியல் களமாக, தன்னுடைய அரசியல் கட்சி கூட்டம் நடத்தும் இடமாக மாற்றியிருக்கிறார் அண்ணாமலை. இது கோயிலா இல்லை இவர்களுடைய கமலாலயமா என்று தெரியவில்லை. கட்சிக்காரர்களை கூட்டிக்கொண்டு பிரதமர் சொல்லும் விஷயத்தை கேட்பீர்கள் என்றால், நாளை வேறொரு கட்சி இதே போல இங்கே கட்சிக் கூட்டத்தை கூட்டுவேன் என்று சொன்னால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

அதோடு, பெருமாளின் மண்டபத்தை கட்சிக் கூடாரமாக மாற்றி அங்கே ஒரு கூட்டம் நடத்துகிறது என்றால் திமுகவிற்கும், பாஜகவிற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வியெழுப்பியிருந்ததோடு, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து இந்த கூட்டத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தார் என்று கேட்டிருந்தார். மேலும், கோவிலில் பஜனை பாட காவல்துறை அனுமதி கொடுக்காமல் பக்தர்களை விரட்டி அடிக்கிறது. ஆனால் அதே கோயிலில் கட்சி கூட்டத்தை நடத்துவதற்கு எப்படி அனுமதி கொடுத்தது. இது சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் செயல். கோயிலினுள் கட்சிக்கூட்டத்தை கூட்டி என் மத நம்பிக்கையை கேலிகூத்தாக்கியிருக்கிறார் என்று விமர்சித்திருந்தார். அத்துடன், அண்ணாமலை எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவர் செய்தது தவறு. கோயில் இடத்தை கட்சி கூட்டம் நடத்தும் இடமாக பயன்படுத்தியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததோடு, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிலமை இன்னும் மோசமாகும். கோயில்கள் எல்லாம் கட்சிக்கூடாரமாகிவிடும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கும் பாஜகவினர் என்றும் கூறியிருந்தார்.

 


அந்த காணொளிக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சட்டத்தை மீறிய மாஜி ஐபிஎஸ் திரு அண்ணாமலை என்று மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை பாஜகவிலிருந்து பலர் தொலைபேசியில் அழைத்து மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தனி மனிதனை மிரட்டுவது சட்டப்படி குற்றம். இதற்கு முழுப்பொறுப்பும் அண்ணாமலை தான் எடுக்க வேண்டும். என் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணாமலை தான் என்றதோடு, வெளியே போகும் போது லாரியை வைத்து தட்டிவிடுவேன் என்று ஒருவர் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். சட்டத்தை மதிக்க வேண்டிய அண்ணாமலை, அவரது அடியாட்களை விட்டு என்னை மிரட்டுகிறார் என்றும் குற்றம்ச்சாட்டியிருந்தார்.

இவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது ஆர் எஸ் எஸின் கிளை அமைப்பான பாரதிய யுவ சேவா சங். இந்த அறிக்கையினை பாரதிய யுவ சேவா சங் அமைப்பின் தேசிய தலைவர் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரங்கராஜனுக்கு எதிராக அண்ணாமலை மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்படும் ரவுடித்தனங்களுக்கு எங்களது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு அதிக வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவருக்கு இது போன்றவைகளை செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த செயல்களை வைத்து பார்க்கும்போது திராவிட கொள்கைகளை ஆதரிப்பவர்கள், இந்துக்களின் ஓட்டுகளை பிரிக்க அண்ணாமலை வடிவில் மாறுவேடத்தில் அதிக அளவில் பாஜகவில் ஊடுருவியிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயல்பாடுகளால் கட்சியின் பெயர் தொடர்ச்சியாக களங்கப்படுத்தப்படுவது, கட்சியை சரிசெய்யமுடியாத அளவிற்கு சிதைப்பதற்கு எடுத்துச் செல்லும். தமிழக பாஜக சுயமாக தன்னை அழித்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறது. எங்களது ஆதரவை ரங்கராஜன் நரசிம்மனுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.