வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 9-ந் தேதி இரவு முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பியதுடன் வீடுகள், குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இந்த சூழலில், நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.


இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி., இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ந் தேதி கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் அடுத்த 3 நாட்களில் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.




கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகள் உள்பட பல கிராமங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


மேலும், அந்தமான் பகுதியில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நீலகிரி மாவட்டத்தில்1 13-ந் தேதி (இன்று), 14-ந் தேதி ( நாளை), 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மேற்கூறிய நான்கு நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயமும் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் பயணிக்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.




முன்னதாக, சென்னையில் கடந்த நான்கு தினங்களாக பெய்த மழையால் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது, அவற்றில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. வேளச்சேரி, கொளத்தூர், ராயபுரம், வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாதததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. மணலியில் மழைநீருடன் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரும் கலந்துகொண்டதால் மழைநீர் தேங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண