"வெகு தூரம் ஓடுவதால், கூட வருபவர்களே சோர்ந்துவிடுகின்றனர்" என்று சுந்தர ராமசாமி எழுதுவார், நம் வாழ்வின் ஓட்டத்தில் யாரையுமே கடைசிவரை கொண்டு செல்ல முடியாத கொசுரான சக்தியையே கொண்டிருக்கும் நமக்கு மனவெளி என்ற இடமொன்று உண்டு. அங்கு யாரை வேண்டுமானாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சுமந்து செல்லலாம். அங்கு நாம் பெரும்பாலும் வைப்பவர்கள் நம் பெற்றோர்கள், காதல், மனைவி, மக்கள் என்பது இயல்பு. ஆனால் வெகுவானோரின் கூடவே பயணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் வெகு சிலரே.
அவர்கள் அவர்களது படைப்பு மூலம் நம்மிடையே உலவிக்கொண்டிருப்பார்கள் ஒரு காற்றைப்போல. பாரதி அப்படி ஒரு காற்றுதான். பாரதியைப் புரிதல் என்பது வாழும் உயிர்களை, மனிதநேயத்தை, ரௌத்திரத்தை, ஒற்றுமையை, ஆன்மீகத்தை, பகுத்தறிவை, காதலை, பண்பாட்டை, சமநிலைச் சமூகத்தைப் புரிவதற்குச் சமம். ஆனால் நாம் அதிகம் சிலாகித்த பாரதி ஒரு சூடான காற்று, புரட்சி வேகம் கொண்ட காற்று, புரட்சியின் வார்த்தைகளை எரிமலை நெருப்புக் குழம்புபோல கக்கும் காற்று அது. அது தீயோர்கள் என்றல்ல, தீய எண்ணங்களை கூட சுட்டு ஓட விடும்.
ஆனால் பாரதிக்கு ஒரு குளிர் காற்றும் உண்டு, மார்கழி மாதத்து காலை நேரத்து பாண்டிச்சேரியின் கடலோர காற்று அது. சட்டென தேகம் சிலிர்க்கும் சுவாரஸ்யமான காற்று. பாரதி என்ற சொல் ஏன் தமிழ் மக்களுக்கு அவ்வளவு பதிந்தது என்றால், அதற்கு முக்கிய காரணம் பால் வேற்றுமை அற்றது, அந்த சொல், இருபாலருக்கானது அந்த சொல், இருவருக்கும் பாரபட்சமின்றி அந்த பெயரை வைத்து கொண்டாடியிருக்கிறோம்.
மாறுவேட போட்டிகளில் குழந்தைகளுக்கு மீசையையும் முண்டாசையும் வைத்து எளிதில் பாரத்தியாக்கி விடுகிறோம். தமிழ் சமூகத்தால் இனி நிராகரிக்கவோ, மறக்கவோ முடியாத ஒருவர் என்ற பட்டியலில் முதலிடத்திப் இருப்பார், பாரதி. செந்தமிழின் மகா கவிஞன், சுதந்திர வேட்கை சூழ்ந்திருந்த கலகக்காரன், சமுதாய சீர்திருத்தத்தின் புரட்சிக்காரன் என்பதையெல்லாம் தாண்டி நம் வீட்டில் ஒருவனாக, நம்மோடு சுற்றித்திரியும் சக நண்பனாக, காதலனாக, ரசிகனாக அவருக்குள் அவர் வரிகள் மூலம் நம்மை வைத்து பார்க்க முடிந்த ஒரு நல்ல அழகான முகமூடியாக பாரதியை எப்போது வேண்டுமானாலும் எல்லா சூழலிலும் நாம் சூடிக்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் பாட்டெழுதி இருக்கிறான் இந்த தீராத ஓடை.
காதல்
முன்பு சொன்னதுபோல் புரட்சிக்கவிதைகளை, சூடான காற்றை கொண்டாடிய அளவு பாரதியின் காதல் கவிதைகளை நாம் கொண்டாட வில்லை. கண்ணம்மா என்ற வார்த்தை மீது வைத்த காதல் ரசங்களை அவ்வபோது சினிமாக்கள் கொண்டாடுகின்றன, ஆனால் பொது சமூகம் கொஞ்சம் குறைவாகத்தான் கொண்டாடி இருக்கிறது. "ஓடி வருகையிலே, கண்ணம்மா! உள்ளம் குளிருதடீ!", "உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!" என்றும் கண்ணமாவிற்காக உருகித் தீர்க்கிறார். காதலின் வேதனையை எத்தனையோ கவிகள் எழுதியிருந்தாலும் பாரதியார் எழுதியதே எல்லோருக்கும் மாஸ்டர்கிளாஸ். "காதல் பெண்களின் கடைக்கண் வீச்சுக்காய், நோதலும் இன்பம், நோயும் ஒரு இன்பம், ஆதலினால் காதல் செய்வீர்", என்ற வரிகள் நன்கு சண்டையிட்டு உறங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் தலையை கொதிவிட செய்யும் அளவிற்கு சக்திவாய்ந்தது.
ஓர் ஆணுக்கு அவனுக்கான காதலை உணர்ந்துகொள்ள, அவனுக்கான காதலை வெளிப்படுத்த, அவனுக்கான பெண்ணை அடைந்துகொள்ள, அந்த அடைந்த பெண்ணை தீராமல் காதல் செய்ய அவனுக்குள் ஒரு பாரதி தேவைப்படுகிறான், அந்த பாரதியை அவனே அவனுக்கு மீசையிட்டு முண்டாசு கட்டி உருவாக்கிக்கொள்கிறான். அதனால்தான் இன்று வரை இங்கு வாழும், உருவாகும், படைக்கப்படும், காதலிகள் அனைவரும் கண்ணம்மாக்களாகவே உருவகப்படுத்தப்படுகிறார்கள். இன்று கண்ணம்மா என்ற வார்த்தையில் பாடல்கள் மள மள வென வந்து கொட்டிக்கிடந்தாலும் வெகு சிலவே அந்த வார்த்தைக்கு அர்த்தம் சேர்கின்றன. "சின்னஞ்சிறு கிளியே", "சுட்டும் விழி சுடரே" என்று பல பாடல்களையும் தமிழ் சினிமா கொண்டிருக்கிறது. பாரதியின்றி காதல் மட்டுமில்லை சினிமாவும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
"பட்டுக் கருநீலப் புடவை, பதித்த நல்வயிரம், நட்ட நடுநிசியில் தெரியும் நக்ஷத்திரங்களடி" என்று பாரதியார் எழுதியது கண்ணம்மாக்களின் அழகழகான உடைகளை காதல் செய்யக்கற்றுத் தருகிறது. "சோலை மலரொளியோ, உனது சுந்தரப்புன்னகைதான், கோலக் குயிலோசை உனது குரலி னிமயடீ" என்று சிரிப்பையும், குரலையும் சிலாகிக்கயில் காதல் ஊற்று ஒவ்வொருவருக்கும் உள்ளூரும். "பொண்ணை, உயர்வை, புகழை, விரும்பிடும் என்னை கவலைகள் தின்னத் தகாதென்று நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா" என்ற இந்த வரிகள் அனைத்து சாதாரணர்களுக்குமானது. எல்லோருக்கும் எளிதில் ஒன்றிப்போகக்கூடிய கவிதைகள் தான் பாரதியுடையது. நாம் எல்லோரும் இந்த மனித வாழ்வின் கசப்புகளை தின்று, இருட்டுகளில் நீந்தி கண்ணம்மாக்களில்தான் சரணடைகிறோம். "பிரித்து பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றி பிரிதொன்றில்லை" என்ற வரிகளை எழுதி தீராத காதலை தன்னுள் தேக்கி வைத்து அள்ளி அள்ளி வீசும் அனைத்து காதலருக்கும் துணையாய் நிற்கிறார். ஆம் அவன் கண்டதெல்லாம் கண்ணம்மாவின் முகம் மட்டும்தான். முகமின்றி பிறிதொன்றுமில்லை. அதைப்போலவே இன்னொரு கவிதையில் மாலைநேரக் கடலையும் வானத்தையும் பார்த்திருந்து காத்திருக்கும் பாரதியிடம் பின்வந்து கண்களைப் பற்றிக்கொள்கிறாள் கண்ணம்மா. "பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன், பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன், ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்" என்று கண்ணம்மாவின் பற்றுதலை அறிந்ததன் ஆக்கங்களைப் பாட்டாக அடுக்குகிறான்.
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!
கொண்டாட்டம்
மனித வாழ்வின் கொண்டாட்டங்களை பற்றி பாரதியார் வாழ்வின் சுவைகளை ஊற்றி எழுதியிருக்கிறார். வாழ்வு எத்தகைய சுகங்கள் கொண்டது என்று எழுதுகையில் "பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று, பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே, இச்சை தீர மதுவடித் துண்போம்" என்று கொண்டாட்டங்களை சிலாகிக்கிறார். தொடர்ந்து, "கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் இச்ச கத்தினில் இன்பங்க ளன்றோ?" என்று வாழ்வின் இன்பங்களை ரசித்து எழுதுகிறார். இவற்றின் நல்ல இன்பங்கள் வேறெங்கும் உண்டோ என்று அவற்றின் இன்றியமையாமையை விளக்குகிறார். "கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம், பூத லத்தினை ஆள்வதில் இன்பம்," என்று இன்பங்களுக்கு எல்லைகள் என்ற ஒன்று இல்லை, எதில் மனம் குளிருகிறதோ அதன் இன்பங்களை அள்ளி அள்ளி சுவைத்திட கூறுகிறார். "ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!" என்று அன்பைக் கொண்டாட சொல்கிறார். நம் உலக வாழ்வின் முக்கிய தொழிலே அன்பு செய்தல் என்று உணர்த்துகிறார். இறைவனை ஓது இன்பம் என்று பாரதி குறிப்பிடுகிறார். குறிப்பாக இறை இன்பம் பெறுவதற்கு சாதிகள் ஓது தடை கிடையாது என்று அங்கும் சாதி எதிர்ப்பு பேசுகிறார். பாரதியார் வகுக்கும் இன்பங்களில் நம் மனதை குளிர்விக்கும் அனைத்தும் இடம் பெறுகிறது. அதற்கு சரி தவறென்ற அளவுகோளெல்லாம் அவர் வைக்கவில்லை. இன்பங்கள் எங்கு கிடைத்தாலும் அதனை அள்ளி அனைத்துக்கொள்ள சொல்கிறார்.
பெண்ணியம்
“பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்று அரசியல் தளத்தில் சாதி எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு என்கிற இரட்டைத் தேசியத்தைத் தெளிவாக முன்னெடுத்த பாரதி சமூக விடுதலையின் ஆதாரமான அடிப்படைத் தேவையாகப் பெண் விடுதலையை முன்வைத்தவர். எவற்றையெல்லாம் பெண்ணின் அடையாளமாக, பெண்மையின் கூறுகளாகக் காலம்காலமாக நம் சமூகம் தூக்கிப் பிடித்து வந்ததோ அவற்றையெல்லாம் மறுத்து, மாற்று அடையாளங்களை பாரதி முன்வைத்தார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பைப் பெண்ணின் கல்யாணக் குணங்களாகச் சித்தரித்த காலத்தில், ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்றார். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் பெண்ணின் குணங்கள் என்றார். கற்புநிலையை இரு பாலருக்கும் பொதுவில் வைத்தார். கணவனுக்குப் பின்னால் தலைகுனிந்து நடப்பதே பெண்ணின் சிறந்த இயல்பு என்றிருந்த காலத்தில் செல்லாம்மாளின் தோளில் கை போட்டு, தன்னுடன் இணைந்து நடக்கச் செய்து புரட்சி செய்தார். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் தன் உறவுகளுக்குள்ளும் தான் கொண்ட கொள்கைகளை விவாதிப்பதை பாரதி வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அறிவுச் சமூகத்தோடும் அதே சமயம் குடும்பப் பெண்களோடும் ஒரே நேரத்தில் உரையாடல் நடத்தும் அவரால்தான் பெண்விடுதலைக்காகச் செயல்பூர்வமாகவும் முற்போக்காகவும் சிந்திக்கவும் பேசவும் முடியும்.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்களுக்கு கல்வியென்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் பெண்களை எப்போதும் உயர்த்தி உயர்த்தியே எழுதி வந்தார் பாரதி. பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது என்கிற கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார் பாரதி. 'சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளை களால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை, பாட்டனார்களாகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவர்களாய் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது என்னுடைய மனம் குருச்சேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ச்சுனனுடைய மனம் திகைத்ததுபோலத் திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங் களால் எதிர்த்தல் நினைக்காத காரியம். அது பற்றியே சாத்விக எதிர்ப்பினால் அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்... இந்த சாத்விக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமெனின், இந்தக் காலமே சரியான காலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாசமே சரியான மாசம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே நல்ல முகூர்த்தம்’
மனிதம்
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றும் ஏழை, பணக்காரன் என்றும் பாகுபாட்டில் மிதந்து கொண்டிருந்த சமூகத்தின் மீது தன் கருத்தை வைக்கிறான். "ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில்,இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே" என்று சாதியத்தை பற்றியிருப்பவர்களை பொட்டில் அடிக்கிறார். "சாதி மதங்களைப் பாரோம் - உயிர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தவரா யினும் ஒன்றே! சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம்" பிறக்கும் போதே ஜாதியின் அடையாளத்தை இந்த மனித குலத்திற்குப் பச்சைக் குத்தி அனுப்பியது யார்? பூனைகளுக்கு ஜாதிகள் உண்டா? கூவும் குயிகளுக்கு ஜாதிகள் உண்டா? ஊர்ந்து செல்லும் பாம்புகள், நீந்தும் மீன்கள் யாவும் சாதியின் பெயரால் சணடையிட்டுக் கொள்வதில்லை. காதலில் சாதி, கல்யாணத்தில் சாதி, கடவுளின் கருவறையில் சாதி, குடிநீரில் சாதி, அரசியலில் சாதி, குடும்பம் நடத்த சாதி, சுடுக்காட்டில் சாதி, சுவாசிக்கும் காற்றில்கூட நாளை கலந்துவிடலாம் சாதி. சாதியின் பெயரால் அடுக்கடுக்காய் அரங்கேறுகின்றன ஆணவக் கொலைகள்.
பாரதியார் சாதி குறித்த கருத்துக்களை கொண்டு நம்மை அணுகும்போதெல்லாம் குழந்தை பாடல்கள் மூலமாக பெரிதும் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். அதில் இரண்டு வரிகள் மிகவும் பிரபலமானதென்றும் சொல்லலாம்.அனைவருக்கும் பள்ளிகளில் சொல்லி வளர்க்கப்பட்ட, “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்பதும், "ஒன்றென்று கொட்டு முரசே" பாடலும், இரண்டுமே குழந்தைகளுக்கான பாடல்களாக குழந்தைகளை நோக்கி பாடும் விதமாக அமைந்திருக்கும். அதனை இரு விதமாக பார்க்கலாம், ஒன்று நாளைய சமுதாயத்தினர் இடையே சமத்துவத்தை நிலை நாட்டுவதாகவும் கொள்ளலாம், இரண்டாவது இன்று சாதியை பற்றிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அறியாமையில் இருக்கும் சிறுவர்கள், அவர்களுக்கு இப்படி சொன்னால்தான் புரியும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
"நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?" எல்லோரும் இவ்வுலகில் படைக்கப்பட்ட நன்மனிதர்களே.. நல்லெண்ணங்களை விதைக்காமல் தீயதை தன்னுள் விதைத்துக் கொண்டு, மனிதாபிமானத்தைப் புதைத்துக் கொண்டு, புழுதியில் எறிந்த வீணையாய் நல்லிசையைப் புதைத்துக் கொண்டிருக்கிறோம். "அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ?" உள்ளிருக்கும் தீயை, நியாயம் கொண்ட ரௌத்திரத்தை, அநீதிக்கு எதிராய்ப் பொங்க இயலாமல் பொசுங்கிக் கிடக்கும் நம் மனசாட்சியை பாரதியின் அக்னிக் குஞ்சாய் நமக்குள் விதை செய்வோம். "பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவ மெய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்" வேடிக்கையான மனிதர்களை போல பாரதி வீழ்ந்துவிடாட்டேன் என்று தன்னை பற்றி மட்டும் கூறவில்லை. இந்த வரிகளை படிக்கும் அணைவரையும் தான் கூறுகிறார். அதுதான் பாரதியின் தனித்துவம், அவரது கவிதைகள் அனைத்தும் நமக்கு நாமே எழுதியது போல தோன்றவைக்கும் குணம் கொண்டுள்ளன, அவை நம்மில் ஒரு பாரதியை கட்டமைத்து அங்கிருந்து உலகை உற்றுநோக்க செய்கிறது.
பாரதியாய், பாரதியின் அன்பின் முகமூடி, புரட்சி முகமூடி, மனிதத்தின் முகமூடி ஆகியவற்றை அணிந்து இந்த உலகை அணுகுவோம், சமத்துவத்துடன், காதலுடன்...