திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்ல முயன்ற கலைமாமணி விருது பெற்ற பிரபல நடன கலைஞரான ஜாகிர் உசேனை, இசுலாமியர் என்பதற்காக கோயிலுக்குள் நுழைய விடாமல் அவரை வெளியே தள்ளிய விவகாரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஜாகிர் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உண்மையில் நடந்தது என்ன என அவரிடம்  கேட்டோம் :-



பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்


ஜாகிர் உசேன் : தன்னை வைணவன்  என பொய்யை சொல்லிக்கொண்டு திரியும் ரங்கராஜன் எனும் நபர், என்னை கோயிலில் இருந்து இசுலாமியர் என்பதற்காக நெட்டி தள்ளி, தவறான வார்த்தைகளை பிரயோகித்து வெளியே தள்ளினார்.


கேள்வி : இதற்கு முன்னர் நீங்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு இருக்கீன்றீர்களா ? ஏனென்றால், இந்து அல்லாதவர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதி இல்லை என அறநிலையத்துறை போர்டே வைத்திருப்பார்களே ?


ஜாகிர் உசேன் : பல முறை கோயிலுக்குள் சென்றிருக்கிறேன். நான் இப்போது புதிதாக அங்கு செல்லவில்லை. கோயில் சார்பாகவே நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி, அதில் ஆடியுள்ளேன்.


கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லக் கூடாது என்று போர்டு வைத்திருப்பது உண்மைதான். ஆனால், அது உண்மையான பக்தர்களை கட்டுப்படுத்தாது. இவ்ளோ பெரிய கோயிலில் யார் இந்து, யார் கிறிஸ்துவர், யார் இசுலாமியர் என்பது எப்படி தெரியும் ?



முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஜாகிர் உசேன்


முதலில் பிராமணர்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்றார்கள். பின்னர், உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றார்கள். அதன்பிறகு அனைத்து இந்துக்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீய எண்ணத்தோடு மற்ற மதத்தினர் உள்ளே வந்து ஏதுவும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற விதி ஏற்படுத்தப்பட்டது. தூய நோக்கம், நல்லம் எண்ணம் கொண்ட பக்தர்களை இது கட்டுப்படுத்தாது.


விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோயிலில் கூட இசுலாமியர்கள் தான் முன்னின்று கோயில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். திருப்பதிக்கு நான் செல்லும்போது யாரும் என்னை தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டாள் கோயிலில் ஆடியிருக்கிறேன். உபன்யாசம் செய்திருக்கிறேன்.


உப்பிலியப்பன் கோயிலில் ஆடியிருக்கிறேன். சாரநாத பெருமாளுக்கு என்னுடைய கலைமாமணி விருதை அர்ப்பணித்திருக்கிறேன். அதைதான் பெருமாள் இன்னும் அணிந்துக்கொண்டிருக்கிறார். 


பக்தி இருந்துவிட்டால் இந்து என்ன ? முஸ்லீம் என்ன ? எத்தனை இசுலாமிய பெண்மணிகள் படுதா போட்டுக்கொண்டு ஆண்டாள் கோயிலுக்கு வருகிறார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குள் இசுலாமியர்கள் வரவில்லையா ? திருவல்லிக்கேணி கோயிலில் வெள்ளம் வந்து, ஒரே சேரும் சகதியுமாக கிடந்தபோது அதை சுத்தம் செய்தவர்கள் இசுலாமியர்கள் தானே ? அப்போது உங்களுக்கு மதம் தெரியவில்லையா ? நல்ல நோக்கத்தோடு வந்து யார் வேண்டுமானலும் பெருமாளை சேவிக்கலாம். அப்படி இருக்கும்போது இப்படி ஒரு சட்டம் எதற்கு ?


கேள்வி : தமிழக அரசிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன ?


ஜாகிர் உசேன் : கடவுளை நம்பும் எவரும், எந்த கோயிலுக்குள் போனாலும் அவர்களை தடுக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை சட்டத்தில் இதற்கு ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.