Vetrimaaran: இந்த வருடத்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு:
தமிழ்நாடு அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில்,’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது:
”சினிமா மேடைகளில் மட்டுமே பேசிய எனக்கு இந்த மேடையில் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருந்து வருகிறது. தாய் தந்தையர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வறுமையில் இருந்தாலும் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் வேலை. கல்வியை எப்படி சிஸ்டமிக்காக அணுகவேண்டும் என்பதை இந்த நாலு வருடங்களில் நடந்திருக்கிறது. இந்த வருடம் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை நினைத்தால் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் கல்வியில் நாம் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறோம் என்பது தான். இது சாதாரண விசயம் அல்ல. நாம் கல்வியில் முதன்மையடைந்து விடக்கூடாது என்பதற்கான வேலைகளை சிலர் செய்கின்றனர். ஆனால் என்ன நடந்தாலும் நாம் உயர்ந்த இடத்திற்கு செல்வோம் என்பதை இதன் மூலம் பார்க்கப்படுகிறது. மாணவர்களை போல நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டும். காலை உணவு மிக முக்கியமானது. பள்ளியில் அது கிடைக்கிறது என்பதற்காகவே பல மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
இந்த வருடத்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக சொல்கின்றனர். அந்த அளவிற்கு திட்டங்களும் ஊக்கமும் அதை செயல்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு குழுவும் கிடைத்திருப்பது நமக்கு பெரிய நன்றி. இந்த அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி” என்று கூறினார்.