தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துவரும் சூழல் தான் நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 35873 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 448 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு என்ற முடிவை அரசு அறிவித்துள்ளது. 


இந்தப் புதிய அறிவிப்பின்படி அத்தியாவசிய தேவைகளான பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒரு வாரத்திற்கு இயங்காது. காய்கறிகள் தள்ளு வண்டிகளில் தெருக்களில் மாநகராட்சி சார்பில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் முழு லாக்டவுனில் வங்கிகள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 




புதிய ஊரடங்கு அறிவிப்பின் படி ஏடிஎம் வசதிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகள் 33% பணியாளர்களுடன் அடுத்த ஒரு வாரத்திற்கு இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வங்கிக்கு சென்று பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது. அதனால் வங்கிகளில் மிக முக்கிய பணிகள் கண்டிப்பாக நடைபெறும் என தெளிவாகியுள்ளது. இவை தவிர எரிவாயு சிலிண்டர் டெலிவரி, அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், பத்திரிகை, தொலைதொடர்பு சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


முன்னதாக மருத்துவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் இன்னும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து கட்சி எம்.எல்.ஏ குழுவின் கூட்டத்திலும் ஊரடங்கை தளர்வுகள் இன்றி செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வரும் திங்கள் முதல் ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.