இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 3 கோடியே 46 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 46 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு தெரிவித்ததாவது,
தமிழகத்துப் பெண்கள் அதுவும் கரூர் பெண்கள் மிகவும் புத்திசாலி ஆனவர்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவிகளை நீங்கள் சிறுக சிறுக வளர்த்து அதை பெரிய அளவில் ஆலமரம் போல் வளர்க்க வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை சரியான கால அவகாசத்தில் வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு திருப்பி செலுத்தும் பொழுது நன்றாக கடன் செலுத்துவதன் காரணமாக வங்கியாளர்கள் உங்களைத் தேடி வந்து மீண்டும் கடன் கொடுப்பதற்கு வருவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிக அளவில் வட்டிக்கு நீங்கள் கடன் வாங்க கூடாது என்பதற்காகத்தான் வங்கிகள் மூலம் இவ்வளவு எளிமையாக அதிக அளவிலான கடன்கள் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதை அறிந்து கொண்டு சிறந்த முறையில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு உங்கள்வாழ்வாதாரத்தை வளமாக்கி கொள்ள வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஜார்ஜ் பாபு லாசர், முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மரு. முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), உமா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கிளை மேலாளர் சரவணன், ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் சாமிநாதன் அருள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்