மாரடைப்பால் இறைவன் திருவடி சேர்ந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் நேற்று மாலை சந்தன நாற்காலியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வேப்பிலை தூவப்பட்டு, ஆதிபராசக்தி ஜோதி விளக்கு  ஏற்றப்பட்டுள்ளது.


பங்காரு அடிகளாரின் உடல் தியான நிலையில் அடக்கம்:


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலின் சித்தர் பீடத்தின் தலைமை ஆன்மீக குருவாக இருந்து வந்த,  பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று  இறைவன் திருவடி சேர்ந்தார். வழக்கமாக மனிதர்கள் மரணித்தால் உறங்கும் விதமாக தான் உடல் அடக்கம் செய்யப்படும். ஆனால் சித்தர்கள் போன்றோர் உயிரிழந்தால் அமர்ந்தபடி வைத்து தான் உடல் அடக்கம் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.


அதன்படி, பங்காரு அடிகளாரின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தியான நிலையில் சித்தி அடையும் வகையில் சந்தன நாற்காலியில் வைத்து பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கருவறையின் பின்புறம்  உள்ள அருள்வாக்கு கூடத்தின் மேற்கு திசையில் தோண்டப்பட்ட குழியில், புற்று மண்டப பகுதியில் வில்வம், உப்பு, திருநீறு, தர்பை, குங்குமம் மற்றும் ஐம்பொன்  உள்ளிட்ட 18 வகையான  பூஜைப்பொருட்கள் இடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கண்ணீர் மல்க ”ஓம் சக்தி பராசக்தி” மற்றும் “அம்மா, அம்மா” என முழக்கமிட்டனர். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி, துப்பாக்கி குண்டுகள் முழங்க பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.  இந்த நிலையில் தற்போது பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வேப்பிலை தூவப்பட்டு, ஆதிபராசக்தி ஜோதி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.


பக்தர்கள் திரண்டு வந்து அஞ்சலி:


கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து,  கோயில் கருவறை அருகே உள்ள தியான மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இந்த செய்தி வெளியானதுமே தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அங்கு குவிய தொடங்கினர்.


நள்ளிரவு முதலே செந்நிற ஆடை அணிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், கதறி அழுதவாறு நெடு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இரண்டாயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே பங்காரு அடிகளார் மறைவால் மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டன.  


தலைவர்கள் அஞ்சலி:


பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான தலைவர்களும், பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினர். அதன்படி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, அன்புமணி ராமதாஸ், நடிகர் சந்தானம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, பாஜக் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.