என்.ஐ.ஏ சோதனை வளையத்திற்குள் கீழக்கரை நகர் சிக்கி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிகம் வெளிநாட்டு தொடர்பு உள்ளவர்களும், கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் மித மிஞ்சிய செல்வந்தர்களும் இங்கு வசித்து வரும் நிலையில், என்.ஐ.ஏ சோதனை நடைபெறும் காலங்களில் எல்லாம் கீழக்கரையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காடு தெருவைச் சேர்ந்த தமீமுன் ஆசிக் என்பவர் வீட்டிலும் கீழக்கரை புது கிழக்குத் தெரு அல் மூபீத் என்பவர் உள்ளிட்ட இரண்டு வீடுகளில் இன்று அதிகாலை முதல் நடந்து வந்த NIA அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில், சிம்கார்டுகள், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணைக்காக ஒருவரை அழைத்து சென்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 10 காயமடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூரு, தார்வாட், ஹுப்ளி ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரின் அடையாளங்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் வரைந்துள்ளனர். ஆனால், சிசிடிவியில் காணப்படும் நபரை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு இருக்கிறது? என்ன காரணத்திற்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மர்மநபர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலை தேர்வு செய்தார் என்பன போன்ற விஷயங்கள் தெரியாமல் மர்மமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது. இதில் புது கிழக்கு தெருவை சேர்ந்த அல் முபித் என்பவரது வீட்டில் நடந்த சோதனையின் போது, அந்த வீட்டில் ஆறு சிம் கார்டுகள் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கிருந்து அவரது சகோதரரை விசரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதே போன்று பருத்திக்கார தெருவை சார்ந்த தமீம் ஆசிக் என்பவரது வீட்டில் சோதனையில் அவரது ஆதார்கார்டு மற்றும் கல்வி சான்றிதழ்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.
காலை முதல் நடைபெற்ற இந்த சோதனையின் முழு விசாரணையின் முடிவில் சோதனைக்கான காரணமும், குண்டுவெடிப்பில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பதும் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்துக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கீழக்கரையில் இன்று காலை முதலே என் ஐ ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.