ரேஷன் அட்டைத்தாரர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும். 'ஆதார்' எண் கேட்கக் கூடாது என அதிகாரிகளை அறிவுருந்துமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக 2023-ஆம் ஆண்டு பொங்கல் பரிசில் இடம்பெற உள்ள பணமும், வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் எண் அடிப்படையில் உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மொத்தம் உள்ள 2.23 கோடி அரிசி கார்டு தாரர்களில், 14.84 லட்சம் பேருக்கு, வங்கி கணக்குகள் இல்லாத விபரங்களை கண்டறிந்துள்ளனர்.
அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்காக வங்கி கணக்கு இல்லாதவர்களின் பட்டியல், ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பட்டியலில் இல்லாதவர்களையும் தொடர்பு கொள்ளும் ரேசன் ஊழியர்கள், வங்கி கணக்கு துவங்க அறிவுறுத்துவதோடு இல்லாமல், ஆதார் எண் உள்ளிட்டவற்றை கேட்கின்றனர்.
இது, கார்டுதாரர்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரேசன் அட்டைதாரர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் ஆதார் எண் கேட்கக் கூடாது என ரேசன் கடை ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது, வங்கி கணக்கு இல்லாத நபர்கள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை ரேசன் கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வங்கி கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களின் ஆதாரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில் இல்லையெனில் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய வங்கியிலோ புதிய கணக்கு துவக்க வேண்டும். அதை ஆதார் எண் உடன் இணைத்து, அந்த விபரத்தை அவர்களது ரேஷன் கடையில் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும், கார்டுதாரர் களின் ஆதார் எண் விபரங்களை, எக்காரணத்தை முன்னிட்டும் கேட்கவோ மற்றும் ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது என, சார்நிலை அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
TN Rain Alert: தயாரா மக்களே... இன்று முதல் தமிழகத்தில் கனமழை இருக்கு - வானிலை ஆய்வு மையம்..!
பரணி தீபம், மகா தீபம் காண இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு... ரெடியாகுங்க பக்தர்களே