சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (55), இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நடராஜன் (33), கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா(28), என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்று உள்ளது.




திருமணம் ஆகி ஒன்றரை மாதம் ஆன நிலையில், கணவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்டோபர் மாதம் 19ம் தேதி வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அபிநயா மாயமாகி உள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் நடராஜன் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 40 நாட்கள் தேடுதலுக்கு பிறகு பழையமகாபலிபுர சாலை விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அப்பெண் மதுரையை சேர்ந்தவர் என்பதும், நகையை மதுரையில் வைத்திருப்பதாக தெரிவித்ததன் பேரில் போலீசார் அப்பெண்ணுடன் நகையை பறிமுதல் செய்ய மதுரை சென்றுள்ளனர். நகை, பணம் எடுத்து சென்றது ஏன் என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.




கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை அபிநயா 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார். இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது