தென்மேற்கு பருவமழை பொறுத்தவரையிலும் இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் இந்த ஆண்டு அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் கனமழை:
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மேற்கு திசை காற்றும், தென்மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வடதமிழகம் பகுதியில் நிலவுகிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிற்கும் மேல் அடுக்கிற்கும் இடையிலான நிலைத் தன்மை குறைந்து இடி மழைக் கூட்டங்கள் உருவாகி மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து கடற்பகுதியில் அருகே வலுப்பெற்றது.
மழை நிலவரம்:
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இயல்பை விட அதிகம்:
தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை ஆகும். இது இயல்பை விட 6 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
மேலும்,15.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.08.2023 முதல் 20.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.