கடல் வளத்தை பாதுகாக்கவும், கடலைத் தூய்மைப்படுத்தவும், மீன் வளத்தை பெருக்கவும் கடல் ஆமைகள் பெரும்பங்கு வகிக்கிறது. ஆமை இனங்கள் அழிவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து அதனை பத்திரப்படுத்தி குஞ்சு பொரித்த பின்பு அதனை கடலில் விட்டு வருகின்றனர்.

 

ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடல் ஆமை இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் முட்டைகள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதம் அடையாமல் இருக்கும் வகையில் கடலூர் வனத்துறை சார்பில்  கடலூர்  கடலோர பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாப்பதற்காக பொரிப்பகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் ஆமை  மூட்டைகள்  குஞ்சுகள் பொறிக்கப்பட்டு கடலில்  விடும் பணி வனத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 



 

முதற்கட்டமாக சேகரித்து வைக்கப்பட்ட 109 ஆமை முட்டைகள் குஞ்சு பொரித்த நிலையில் கடலூர் மாவட்ட வனத்துறை சார்பாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 109 ஆமை குஞ்சுகள் கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி, தலைமையிலான குழுவினர் மற்றும் ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாப்பாக வைத்து வனத்துறைக்கு உதவிய விலங்கு ஆர்வலர் செல்லா ஆகியோர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர்.