பட்டுக்கோட்டையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, இறந்த நிலையில் ஒரு வாளியில் வைத்துமூடிவிட்டு பிரசவத்தில் ஏற்பட்ட ரத்தப்போக்கு நிற்காமல் தாயும் இறந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தையை தாயே கொன்றாரா என்பது விசாரணையில் தெரியவரும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் வசந்தி வயது (38) அவரது கணவர் செந்தில் (48) இவர் கட்டிடத் தொழிலாளி. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்து வரும் நிலையில், ஆறாவதாக கர்ப்பம் தரித்த வசந்தி தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் ஒரு வாளியில் மூடிவைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிரசவத்திற்கு பின்னர் வசந்திக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படவே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவர் இறந்த பிறகு அவரது உடலை எந்த தகவலும் சொல்லாமல் அரசு மருத்துவமனையிலிருந்து அவரது கணவரும் உறவினர்களும் எடுத்து வந்ததை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை செய்ததில், தொடர்ந்து இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் அவரது கணவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த பிறந்த குழந்தையை தாயே கொலை செய்தாரா? அல்லது தானே மரித்ததா? என்பது விசாரணையில் தெரியவரும் என்றனர்.