கரூரைச் சேர்ந்தவர்கள் தயாரித்து திரையரங்கில் இன்று வெளியான ஐயப்பன் சுவாமியை கதைக்களமாகக் கொண்ட திரைப்படத்திற்கு திரையரங்க வளாகத்தில் ஐயப்ப சுவாமியின் படத்தை வைத்து, 18 படிகள் அமைத்து பஜனை செய்து வழிபாடு நடத்தினர்.
கரூர் மாநகரை சேர்ந்த இளங்கார்த்திகேயன், ஸ்டீபன் பாபு ஆகியோர் தயாரிப்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொன் அமுதா திரையரங்கில் "ரூபன்" என்ற தமிழ் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. ஐயப்பன் சுவாமியை கதைக்களமாகக் கொண்ட திரைப்படம் என்பதால், திரையரங்க வளாகத்தில் ஐயப்ப சுவாமியின் படத்தை வைத்து, 18 படிகள் அமைத்து படத்தின் தயாரிப்பாளர்கள், துணை நடிகர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பஜனை செய்து வழிபாடு நடத்தினர்.
அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்றாக தங்களது குடும்பத்தினருடன் திரைப்படத்தைக் காண சென்றனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் கூறும்போது, பெரிய திரைப்படங்களுக்கு இணையாக புலியின் உருவத்தை கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் தத்துரூபமாக அமைத்துள்ளோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஐயப்பன் சுவாமியை கதைக்களமாகக் கொண்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு ரூபன் திரைப்படம் வெளியிடப்படுகிறது.
திரைப்படத்தை ஐயப்பன் என்பவர் சிறப்பாக இயக்கி, நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக 2-கே கிட்ஸ் ஐயப்பன் சுவாமியின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படத்தை சிறப்பாக தயாரித்துள்ளோம். ஐயப்பன் சுவாமியின் திரைப்படம் என்பதால் திரையரங்க வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து இன்று வழிபாடு நடத்தியுள்ளோம். குடும்பத்துடன் அனைவரும் வந்து படத்தை பார்க்கலாம் என்றனர்.