தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், நிறுவனங்களில், விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


 




செய்யும் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத பூஜை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் கரூரில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சாமி கும்பிட்டனர். கரூர் - ஈரோடு சாலையில் குட்டக்கடை அருகே வைக்கப்பட்டுள்ள மைல் கல்லிற்கு வாழை மரம், பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.


 


 




வாழை இலையில் தேங்காய், வாழை பழம் உள்ளிட்ட பழங்கள் வைக்கப்பட்டு படையல் போடப்பட்டது. அவர்கள் வழக்கமாக சாலையின் பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தும் கடப்பாறை, மம்முட்டி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும், அவர்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களையும் சுத்தம் செய்து, அவற்றிற்கு திருநீரு, குங்குமம், சந்தனம் வைத்து பத்தி, சாம்பிரானி கொழுத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


 


 




இதனை அங்கு பணியில் இருந்த சாலை பணியாளர்கள் வழிபாடு செய்தனர். வருடம் முழுவதும் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த வழிபாடு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.