கரூரில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ- மாணவியர் பங்கேற்ற உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.




டிசம்பர் 1ஆம் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதியை கொடிய நோயான எய்ட்ஸ்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 




இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், மாவட்ட சுகாதாரப் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு கலைக் கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியின்போது எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் கையில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவாறு சென்றனர்.


 




தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் அனைவரும் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.