Avaniyapuram Jallikattu 2024: பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
10 மாடுகள், 2 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்:
இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றூம் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்க காளைகளும், காளைகளை அடக்க காளையர்களும் களத்திற்கு வந்தனர். போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயம் ஆகும். மருத்துவ பரிசோதனையில் 10 மாடுகள் போட்டியில் பங்கேற்க தகுதியற்றது என்றும், 2 மாடுபிடி வீரர்கள் மது அருந்தி வந்ததால் போட்டியில் பங்கேற்க தகுதியில்லை என்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசயாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு ஏராளமான பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் நடப்பாண்டும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள். மேலும் பல மாதங்களுக்கு முன் இருந்தே மாடு உரிமையாளர்கள், அதற்கு சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். அவனியாபுரத்தில் (இன்று) 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அதிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 12,176 காளைகள் மற்றும் 4,514 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர். அவனியாபுரத்தில் 2,400 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அலங்காநல்லூரில் 6,099 காளைகளும் கலந்து கொள்ள உள்ளன.
அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி முதலே மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வாடிவாசல், பார்வையாளர் மடம், கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் போட்டியின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பட்டிருக்கும். நேற்று பகலில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் காளைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வாடிவாசல் பின்புறமாக நீண்ட வரிசையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம் என்றால் அது லைவ் கமண்டரி தான். காளை மற்றும் வீரர்களுக்கு ஏற்றவாறு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெரும் மாடுபிடி விரர்களுக்கு வகை வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்.
பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கார், பைக், தங்க காசுகள் என பரிசுகள் குவியும். அந்த வகையில், இந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தேர்வாகும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். மூன்று ஜல்லிக்கட்டிலும் மொத்தமாக 6 கார்கள் வழங்கப்பட உள்ளன.