நம் அன்றாட வாழ்க்கையில் சாலையை பயன்படுத்தாத மனிதரே கிடையாது. குறிப்பாக சாலையில் நாம் பயணிக்கும் போது, பலரும் போக்குவரத்து விதிகளை மீறி தங்களது பயணத்தினை மிகவும் இயல்பாக மேற்கொண்டு விடுவார்கள். அதைப் பார்த்து நம்மில் பலரும் நமக்கு அப்படி ஒரு ஐடியா தோனாம போச்சேனு யோசித்தவர்களாகத்தான் இருக்கிறோம். எதோ ஒரு சிலருக்குத்தான் போக்குவரத்து விதிகள் மீறப்படுவதை பார்த்து கோபம் கொள்வர். ஆனால் ஒருசிலர் செய்யும் செயல்கள் நமக்கு கோபத்தையோ அல்லது வருத்தத்தியோ ஏற்படுத்துவதைக் காட்டிலும், நகைச்சுவையை ஏற்படுத்தும். இந்நிலையில் நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பேசஞ்சர் ஆட்டோ டிரைவர் ஒருவர் சாலையினை கடந்து செல்ல, சாலையின் குறுக்கே பாதசாரிகள் சாலையைக் கடக்க கட்டப்பட்டிருந்த நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாகவும் தாறுமாறான கமெண்ட்ஸ் உடனும் பரவி வருகிறது. குறிப்பாக ஆபத்தை உணராமல் நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி சென்றவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து சமூக வலைதளத்தின் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானதற்குப் பிறகு டிரைவா் ஆட்டோவை ஓட்டிச்சென்ற நடைமேம்பாலம் மும்பை அருகே உள்ள விரார் பகுதியில் மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலைக்கு மத்தியில் இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், " மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலைக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள இந்த நடைமேம்பாலத்தில் படிக்கட்டுகள் இல்லை. பொது மக்கள் மிகவும் சிரமம் இல்லாமல் ஏற வசதியாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், நெடுஞ்சாலைத் துறையால் சாய்வு பாதை கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த சாய்வு பாதை வழியாக நடைமேம்பாலத்தில் ஆட்டோவை, ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்று நெடுஞ்சாலையை கடந்துள்ளார். இந்த சம்பவம் எங்களுக்கும் சமூக வலைதளத்தின் மூலமாகத்தான் தெரியவந்தது. மேலும், மேம்பாலத்தின் இரு புறங்களிலும், சிசிடிவி கேமெரா இல்லை என்பதால், எங்களுக்கு ஆட்டோவின் பதிவு எண் தெரியவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். கூடிய விரைவில் அந்த ஆட்டோ டிரைவரை தேடிப் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம். மேலும், சாலை விதிகளை பொது மக்கள் முறையாக பின் பற்றி பொது மக்களுக்கு இடையூறு இல்லாத பயணத்தினை மேற்கொள்ள வேண்டுகிறோம்” என கூறியுள்ளார்.
அதே நேரத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த மாஸான சினிமா தீம் மியூசிக்குகளை பின்னணியாக சேர்த்து, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் லைக்குகளுக்காக பகிர்ந்து வருகிறார்கள்.