தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தந்த பகுதி முகாம்களில் தங்கியுள்ள அகதிகள்  மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும் அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மறுவாழ்வு முகாம்களிலிருந்து பிற ஊர்களுக்குச் சென்று வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.


ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் தொழிலாளிகளை அழைத்துச் சென்று அடிமைகளாக வேலை வாங்கி வந்தனர். இதற்கு ஏதுவாக மண்டபத்தில் அலுவலகம் ஒன்றை அமைத்து, அங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லும் பணிகளை ஆங்கிலேயர்கள் செய்துவந்தனர். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளிகளைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஏற்கெனவே மண்டபத்தில் இயங்கிவந்த அலுவலகம் மறுவாழ்வு முகாமாக மாற்றப்பட்டது. இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவழியினர் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தில் உள்ள அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 


இதனிடையே, இலங்கையில் நடந்த இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களும் இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.



1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் தீவிரமான நிலையில், அங்கே தமிழர்கள் உயிர்வாழ வழியின்றி தினந்தோறும் அகதிகளாக வரத் தொடங்கினர். இதனால் மண்டபத்தின் முகாம் நிரம்பி வழியத் தொடங்கியது. மேலும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளி அமைப்பினரும், அகதிகளுடன் முகாம்களில் தங்கியிருந்தனர். இதனால் அகதிகள் முகாமின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தினால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அகதி முகாமில் தங்கியிருந்த போராளிகள் இலங்கைக்குத் தப்பிச் சென்றனர். இதனால், அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம்,  மண்டபம் அகதிகள் முகாமிற்கு ஆய்வுக்காக வந்த மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் இருந்து இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை விரைவில் பெற்றுத்தருவதுடன், இவர்களுக்கு இலங்கை திரும்பி செல்ல விருப்பம் உள்ளவர்களை சட்டரீதியாக தாயகம் திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டபம் இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்த பின்னர்  தெரிவித்தார்.


முன்னதாக, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ் இன்று  ஆய்வு செய்தார். பின் இலங்கை அகதிகள் வசிக்கும் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 


அப்போது அவரிடம், இந்திய குடியரிமை வழங்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அகதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம்  பேசிய ஜெசிந்தா லாசரஸ், தமிழகம் முழுவதும் தங்கியுள்ள இலங்கை அகதிகள்  முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால்,  முறையாக ஆவணம் பெற்று சொந்த நாட்டுக்கு செல்வது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் யாரும்  மனு அளிக்க வில்லை. அப்படி மனு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடு நிச்சயம் மாநில அரசு சார்பில் எடுக்கப்படும் என்றார்.


மேலும் சிலர், தாங்கள் தொடர்ந்து தமிழகத்திலேயே வசிக்க ஆசைப்படுவதால் எங்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். அது குறித்தும் தமிழக முதல்வர் கடிதம் மூலமாக மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற்று இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோன காலத்தில் இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்வது அதிகரித்துள்ளதால் அதனை தடுக்க கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்த  அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதுடன், அகதிகள் நல மறுவாழ்வு துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்ட்டு வருகிறது என்றும் கூறினார்.



கடந்த பல ஆண்டுகளாகவே அகதிகளாக தஞ்சம் அடைந்து தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்கள், இந்திய குடியுரிமை பெற்றால் சுதந்திரமாக சென்று எங்கும் வேலை செய்யலாம் கல்வியறிவு பெறலாம் என்ற பல்வேறு காரணத்திற்காக, இந்திய குடியுரிமை கேட்டு வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது இலங்கை அகதிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.