தொகுப்பு : மா.மாரிராஜன், வரலாற்று ஆர்வலர்


இராஜேந்திரனின் பிறந்த தினமான ஆடித்திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இராஜராஜ சோழனின் மகனான இவர்,  தந்தையின் காலத்திற்குப் பிறகு சோழப்பேரரசின் மன்னராக முடிசூடினார். உலக வரலாற்றின் மாபெரும் சக்கரவர்த்திகள் வரிசையில் இராஜேந்திரனும் இடம் பெற்றார். தமிழகத்தின் எல்லையாக தொல்காப்பியம் கூறுவது " வடவேங்கடம் முதல் தென்குமரி வரை "வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் தமிழகத்தின் எல்லையாக இருந்தது. ஆனால், இராஜேந்திரச் சோழன்  காலத்தில் இந்த எல்லையானது மாற்றி எழுதப்பட்டது.


பரந்து விரிந்து நிலப்பகுதியும், கடல் தாண்டிய நாடுகளும் தமிழகத்தின் எல்லையாக இருந்தது.இன்றைய இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பும். (ஏறக்குறைய 10 மாநிலங்கள்),  கடல் தாண்டிய இலங்கையும், வெகுதூரத்தில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளும் தமிழகத்தின் எல்லையாக இருந்தது இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில். இராஜேந்திரனின் முதல் மகனான இராஜாதிராஜனின்  திருமழபாடி கல்வெட்டு இராஜேந்திரசோழனின் ஆட்சிப்பரப்பின் எல்லைகளைக் கூறுகிறது. அதில்க்ஷ்,  " ஸ்வஸ்திஸ்ரீ திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள் தொல்குலம் விளங்க தெந்திய மல்கிய வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும் குடதிசை மகோதையும் குணதிசை கடாரமும் தண்டிநில் கொண்ட தாதைதந் மண்டல வெண்குடை நிழல் தன்கடை நிழன்றி." சூரியகுலத்தில் உதித்து, வடதிசையில் கங்கைப் பகுதியையும் தென்திசையில் இலங்கையையும் மேற்குதிசையில் கேராளவையும் ( மகோதை) கிழக்குதிசையில் கடாரத்தையும் கொண்ட எனது தந்தையின் ஆட்சிபரப்பே எனது எல்லையாக இருந்தது என்று இராஜேந்திரனின் மகன் இராசாதிராசன் கூறுகிறார்.



நினைத்துப் பார்த்தாலே பிரம்மாண்டம். இராஜேந்திரன் காலத்தில் தமிழகத்தின் எல்லைப் பரப்பு பரந்து விரிந்த ஒன்று. இவரது போர் வெற்றிகள் மிக மிக அதிகம்.. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு வெற்றிகள்.  அது கங்கை படையெடுப்பும், கடாரப் படையெடுப்பும்தான். இராஜேந்திரனின் போர் வெற்றிகளும், கண்ட களங்களும் சற்று அதிகம்தான். அனைத்திற்கும் சிகரமாய் ஆய்வாளார்களால்  கொண்டாடப்படுவது கங்கை வெற்றியும், கடார வெற்றியும்..


 அப்படி என்ன அதில் சிறப்பு..?


அரசர்கள் போர்களில் வெற்றிபெறுவதும், அவ்விடங்களில் வெற்றித்தூண் அதாவது ஜயஸ்தம்பம் நடுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்த தூண் கல்லால் செதுக்கப்பட்ட ஒன்று. தனது வெற்றியை பறைசாற்றும் ஒரு அடையாளம். இராஜேந்திரனும் தனது கங்கை வெற்றியை கொண்டாட ஒரு தூண் நட்டார். அது கல் தூண் அல்ல ; நீர்த்தூண். ஜலஸ்தம்பம் என்ற தண்ணீர் மயமான தூண் அது. கங்கை நீரை, சோழபுர ஏரியான சோழகங்த்தில்  கொட்டி ஒரு நீர்த்தூண் நட்டு,  கங்கை கொண்ட சோழன் என்னும் அழியா புகழ் பெற்றார். இந்நிகழ்வுகளை அப்படியே திருவலங்காடு செப்பேடு மற்றும் இராஜேந்திரனது மெய்கீர்த்தி சாசனவரிகள் எடுத்துரைக்கிறது. புதிதாக கட்டமைக்கப்பட்ட  சோழபுரத்தை கங்கை நீரால் சிறப்பிக்க முடிவு செய்கிறார். கங்கைநீரை கொண்டு வருமாறு தம் படைத்தலைவனுக்கு ஆணையிடுகிறார்.அப்படைத் தலைவனும் படையுடன் சென்று வடதேச மன்னர்களை வென்று கங்கை நீரை கொண்டு வருகிறார்.. அப்படைத்தலைவனை வரவேற்ற இராஜேந்திரன், தான் அமைத்த சோழகங்கம் ஏரியில் நீர்த்தூண் அமைக்கிறார்.


உலகத்தமிழர்களின் பெருமைமிகு இந்நிகழ்வை, திருவலங்காடு செப்பேட்டின் 109 - 124 செய்யுள் கூறுகிறது. செய்யுள் 109 - 124 வரை உள்ள வடமொழிப் பகுதியின் தமிழாக்கம். செப்பேட்டின் 109 வது செய்யுள். "பகீரதனின் தவத்தின் வலிமையால்   பூமிக்கு வந்த கங்கை நீரை.. தன் தோளின் வலிமையால் அந்த கங்கை நீரைக்கொணர்ந்து தன் நாட்டை புனிதமாக்க முயன்றான் இராஜேந்திரன்"செய்யுள் 110. "கங்கை நதிக்கரையில் வாழும் பகையரசர்களை வெல்வதற்கு,  வீரத்தில் சிறந்தவனும், பலமான படைகளை உடையவனும்,  அறமறிந்தோரில் முதல்வனுமான தன் படைத்தலைவனுக்கு ஆணையிட்டான். செய்யுள் 111.  "பனிமலையிருந்து வரும் கங்கைநீரைப் போல், கல கல என்னும் ஒலி எழுப்பியவாறு அப்படைத்தலைவனின் குதிரைகள் சென்றது.."- செய்யுள் 112... யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தால் இராஜேந்திரனின் படைகள் கங்கை நதியை கடந்தது.செய்யுள் 113.,  "யானைகள்,  குதிரைகள், வீரர்கள்,  இவர்கள் எழுப்பிய  புழுதி பறந்தவாறு விக்ரமச்சோழனின் ( இராஜேந்திரன்) படைகள் எதிரி மணடலத்தில் நுழைந்தன."  செய்யுள் 114,  இராஜேந்திரனின் படைகள், இந்திரரதனை முதலில் வென்று சந்திரகுலத்தின்  ஆபரணமாய் திகழும் இடத்தை கைப்பற்றியது"  செய்யுள் 115,  "நடைபெற்ற போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட,தண்ட நுனியினை உடைய வெண் கொற்றக்கொடை கீழே விழுந்தது. இது சந்திரனின் பிம்பமே கீழே விழுந்தது போல் இருந்தது " செய்யுள் .. 116, சிபிகுல அரசனின் ( இராஜேந்திரன்)  படைத்தலைவன்
இரணசூரனை வென்று,  தர்மபாலனின் நாட்டில் நுழைந்தான்.பிறகு தேவநதியான கங்கை நோக்கிச் சென்றான். செய்யுள் 117.,  "அந்த நதிக்கரையில் இருக்கும் அரசர்களை படைத்தலைவன் வென்றான். அவர்களைக் கொண்டு அந்த புனித நீரை தன் தலைவன் மதுராந்தகனுக்காக ( இராஜேந்திரன்)  கொண்டு வந்தான்." செய்யுள் 118.,"கோதாவரி நதிக்கரையை இராஜேந்திர சோழன் அடைகிறார். சந்தனப்பூச்சுகள் கொண்டு நதிக்கரையில்
நீராடி முடிக்கிறார். வெற்றியுடன் வரும் தன் படைத்தலைவனை வரவேற்கிறார்." செய்யுள் 119 "அவனுடைய வேகமான அந்தப்படை எதிரி அரசனை வென்று,  பெரும் புகழ் மற்றும் இரத்தினங்கள் இவற்றுடன் கங்கை நீரையும் தன் தலைவனுக்காக கொண்டு வந்தது. செய்யுள் தன்னுடைய தேசத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும்,  கங்கை நீரால் ஆனதுமான ஜய ஸ்தம்பம் ஒன்றை நிறுவினான். ( நீர் மயமான வெற்றித்தூண்)


இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படும் கங்கைப்படையெடுப்பில் அவர் வென்ற நாடுகள்


1. சக்கரக்கோட்டம். இன்றைய சடடீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கூடா என்னும் நகரம்.  2.மதுரை மண்டலம். இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா,  3.நாமனைக்கோனை. இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி என்று யூகிக்கப்படுகிறது.  4.பஞ்சப்பள்ளி.ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் அருகே உள்ள பஞ்சப்பள்ளி.  5.மாசுனிதேசம். சட்டீஸ்கர் மாநிலப்பகுதியாக இருக்கலாம். 6. ஆதிநகர்.ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதி. 7.ஒட்டவிஷயம்.இன்றை ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி.  8.கோசலைநாடு. இன்றைய ஜார்கண்ட் மாநிலம்.  9.தண்டபுத்தி. மேற்குவங்காளத்தின் மேற்குப்பகுதி. 10. தக்கணலாடம். இன்றைய பீகாரின் ஒரு பகுதி. 11.வங்காளதேசம்.இன்றைய அஸ்ஸாம் , பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி. மேற்கண்ட நாடுகளை இராஜேந்திரன் தலமையிலான சோழர் படை வென்றுள்ளது இப்படையெடுப்பில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக அந்தந்த நாட்டின் கலைச் செல்வங்களை வெற்றிச் சின்னமாக தமிழகம் கொண்டுவந்தனர். அந்நாடுகளில் சோழர்களது சாசனங்களும் பொறிக்கப்பட்டன.


இராஜேந்திரனின் மெய்கீர்த்தி சாசனத்தில், கங்கைநீரை எடுத்த இடம்பற்றி கூறுகையில்.."நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் "நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது.. இப்பகுதியை ஆண்ட மகிபாலனை சோழர்கள் வென்றார்கள். கங்கையில் நீர் எடுத்து வரும் சோழர்படையை இராஜேந்திரன் கோதாவரி நதிக்கரையில் வரவேற்றார். கங்கை நீர் எடுத்த சோழர்படைக்கு தலைமையேற்றத் தளபதியின் பெயர். விக்கிரமச் சோழ சோழியவரையனாகிய அரையன் ராசராசன். இவரின் பெயரைக் கேட்டவுடன் எதிரி அரசன் ஒருவர் ஓடி ஒளிந்து கொண்டாராம். கல்வெட்டுச் செய்தி.  கங்கை நீருடன் சோழர்படை தாயகம் திரும்பியது. கங்கைநீரால் சோழபுரம் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.  சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டி அதில் கங்கைநீரை கலந்தனர். இராஜேந்திரனின் கங்கைவெற்றியை பறைசாற்றும்  கல்வெட்டுகள்,   கும்பகோணம் திரிலோக்கியில்  "இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருகின்ற இடத்து திருவடி தொழுது.." என்ற கல்வெட்டு பதிவு செய்கிறது.


அலை கடலில் பல சோழர் கப்பல்கள் சென்று, கடாரத்தரசன் விஜயோத்துங்க வர்மனை வென்று அவன் நகரில் இருந்த வெற்றி வாயிலையும்,  அரண்மணையின் தங்கத்தினாலான கதவையும் சோழர் படை கைக்கொண்டது. விஜயதுங்கவர்மன் என்பவர் தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான ஸ்ரீவிஜய பேரரசின் மாமன்னர். இவரின் தந்தையான சூளாமணி வர்மன் இராஜராஜனின் நெருங்கிய நண்பர்.  சோழநாட்டு நாகப்பட்டினத்தில் சூளாமணிவர்மனால் ஒரு பௌத்த விஹாரை ஒன்று எடுக்கப்பட்டது. இதன் பெயர் சூடாமணி விஹாரம். இந்த பௌத்தக்கோவிலுக்கு தானமாக ஆனைமங்கலம் என்னும் ஊரை இராஜராஜன் வழங்கினார். இராஜராஜன் வழங்கிய நிலத்தானத்தை உறுதி செய்தவர் இராஜேந்திரன்.. இந்த ஆவணம்தான் ஆனைமங்கலச் செப்பேடு..  ஆக.. தந்தை சூளாமணிவர்மன் காலத்தில் நட்பாக இருந்த ஸ்ரீவிஜயநாடு ..
அவனது மகன் விஜயதுங்கவர்மன் காலத்தில் சோழர்களுடன் முரன்பட்டது.


சோழர்கால கடற்படையெடுப்பில் பயன்பட்ட கப்பலின் வடிவம் எவ்வாறு இருக்கும்..?


ஜாவாத்தீவிற்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஜாவா - போராபுதூர் என்னுமிடத்தில் உள்ள மென்டெட் என்னும் பௌத்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் சோழர்கால கலையமைதியில் உள்ளன. இங்கே உள்ள பஞ்சதந்திரகதை சிற்பங்கள், கங்கைகொண்ட சோழபுரத்திலும், தஞ்சை பெரியகோவிலிலும் இருப்பதைபோலவே ஒத்துள்ளன.  இக்கோவிலில் ஒரு கப்பலின் சிற்பமும் உள்ளது.  மரக்கலம் ஒன்றை வீரர்கள் இயக்கும் காட்சி. பாய்மரத்தூணில் கயிற்றை இழுத்தும், நங்கூரம் விடுவித்தும் கப்பலை இயக்கும் காட்சி. இக்கப்பலின் வடிவம் சோழர்கள் பயன்படுத்திய கப்பலின் வடிவமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் முடிவு. சோழர்களின் கடாரப்படையெடுப்பு... நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  கப்பல் புறப்பட்டிருக்கும் என்பது பெரும்பாலான அறிஞர்கள் முடிவு. கடற்கரைக் காற்று, அது விசும் திசை, கடற்பாதை என்று அனைத்திலும் சோழக் கடலோடிகள் திறன் பெற்றவர்களாக இருந்துள்ளார்கள். கடற்காற்றை... ஈழக்காற்று, சோழக்காற்று, கன்னிக்காற்று,  கச்சன் காற்று என்று வகைப்பிரித்துள்ளனர். காற்று வீசும்திசை மற்றும் கடல் நீரோட்டம் பற்றியும் தெளிவுபெற்றிருந்தனர். தென்மேற்கு பருவ கடல்நீரோட்டத்தை சோளி என்றும்,  தென்மேற்கிலிருந்து வடகிழக்கான நீரோட்டத்தை சோளி மீமாரி என்றும் மேற்கிலிருந்து கிழக்கை மேம்மாரி என்றும், அழைக்கப்பட்டதாக B. அருணாச்சலம் அவர்கள் எழுதிய Chola navigation package என்னும் நூலில் பதிவு செய்துள்ளார். கடல்நீரோட்டம் பற்றிய உயர் அறிவு சோழக் கடலோடிகளுக்கு இருந்தது. திசை அறியும் தொழில்நுட்பமும் அவர்களுக்கு அத்துப்படி.




இந்திய அரசு சோழர்களின் கடற்படையை பெருமைப்படுத்தும் விதமாக தனது போர்க்கப்பலுக்கு இராஜேந்திரா என்னும் பெயர் சூட்டியது. தபால் தலையும் வெளியிட்டது. சோழர்களின் கிழக்காசிய படையெடுப்பு உலகளவில் தமிழர்களின் கடற் போர் வல்லமையை பறை சாற்றிய நிகழ்வு. இராஜேந்திரனின் கங்கை வெற்றியையும், கடாரவெற்றியையும் ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில் இவ்வாறு சிறப்பிக்கிறார்.." கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் ...."


மிகப்பெரும் சாதனைகளைக் கொண்ட சோழப்பேரசன் இராஜேந்திரச் சோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை நாளை அரசு விழாவாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!