ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் வழகத்தைவிட காற்று வேகம் அதிகமாக இருப்பதால மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.


வட கடலோர கர்நாடகா மற்றும் அண்டை பகுதிகளில் சூறாவளி சுழற்சியின் காரணமாக, தெற்கு கொங்கன்-கோவா கடற்கரை ஒட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில்  படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதேபோல் மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல் சுழற்சியின் தாக்கத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7.6 கிமீ வரை உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கம் நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.   


இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.


 இந்த நிலையில் வழக்கத்தை விட காற்று வேகம் அதிகரித்து மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதினால் மீனவர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


 இதை அடுத்து ராமேஸ்வரம் மீன்பிடி தறைமுகத்தில் சுமார் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்து மேற்பட்ட நாட்டுபடகுகளும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் நன்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு இழந்து உள்ளனர்.


தமிழக கடலோரப்பகுதிகள்:


தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்:


30.09.2023: கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.