மத்திய அரசோ மாநில அரசோ.. தேர்தல் நெருங்கிவிட்டால் உளவுத்துறையின் தேவை அரசுகளுக்கு அதிகரிப்பது வாடிக்கையாகிவிட்டது. தற்போதும் தமிழக உளத்துறைக்கு முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து ஒரு ரகசிய உத்தரவை பறந்திருப்பதாக பரபரக்கிறது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் வேலைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது திமுக. ராமநாதபுரத்தில் திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சரும் ஸ்டாலின், பாஜகவையும் – மோடியையும் முன் இல்லாத அளவுக்கு காட்டமாக விமர்சித்து தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதென்பதை உணர்த்தியிருக்கிறார்.
40க்கு 40 இடங்கள் தங்கள் கூட்டணிக்கே என்று திடமாக நம்பும் ஸ்டாலினுக்கு கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்துள்ளதாம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் சமீபத்தைய கருத்துக்கணிப்பு. காரணம், அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 8 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
உடனடியாக விழித்துக் கொண்டு உளவுத்துறையை களமிறக்கியிருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் பக்கம்தான் என்று என்னதான் திமுகவினர் சொல்லிக்கொண்டாலும், கடந்த முறை தேர்ந்தெடுத்து அனுப்பிய எம்பிக்களின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொடர்ந்து ஒதுக்கப்படும் தொகுதிகள் போன்ற காரணங்களால் சில தொகுதிகளில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக - பாஜக வலுவான பகுதிகளாகக் கருதப்படும் கோவை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராமநாதபுரம் போன்ற தொகுதிகள் திமுகவுக்கு பாதகமாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமரே ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் கசியவிடப்படுவதால் அதையும் திமுக கூர்ந்து கவனித்து வருகிறது. கன்னியாகுமரி, திருச்சியைப் போன்ற சில தொகுதிகள் கூட்டணிக்கட்சிகள் வசமே எப்போதும் ஒதுக்கப்படுவதால் அங்கு திமுக தொண்டர்கள் கொஞ்சம் சோர்ந்திருக்கின்றனர். இது தேர்தல் வெற்றிக்கு பாதகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி எந்தெந்த தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? திமுகவுக்கு பலவீனமாகும் விஷயங்கள் எவை? அந்தத் தொகுதிகளில் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகளை பிரிக்க வாய்ப்பிருக்கும் தொகுதிகள் எவை? என்பன போன்ற நுணுக்கமான கேள்விகளுடன் ஒரு விரிவான சர்வே எடுக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஸ்டாலின். அந்த சர்வேயின் ரிப்போர்ட் அடிப்படையில் தேர்தல் வியூகங்களை வகுக்க திட்டமிட்டுள்ளாராம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலங்களில் உளவுத்துறையால் இதுபோன்ற சர்வேக்கள் எடுக்கப்படுவது செய்தியாகியுள்ளது. ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் குரல் என்ன என்பதை அறிந்து கணக்குப்போடுவதே கருணாநிதி ஸ்டைல். தற்போது ஸ்டாலின் ஜெயலலிதா ஸ்டைலில் களமிறங்குவதை தலைமை செயலக அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாகப் பேசுகின்றனர்.
எது எப்படியோ.. தேர்தல் முடிவில், இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக இழந்துவிடக்கூடாது, அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்வது மகிழ்ச்சியே என்கின்றனர் திமுக தொண்டர்கள்.