எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மாற வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான். ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் என விநாயகருக்கு சிறஓஉ அபிஷேகங்கள் செய்து  அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர்.  அதேபோல் இன்று ஒவ்வொரு வீடுகளிலும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலையை வாங்கிச் சென்று மூன்று கால பூஜை செய்து விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, பழங்கள் என பல்சுவை விருந்தை படைத்து வணங்குவர். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) பிள்ளையார் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இது ஒருபக்கம் இருக்க பல்வேறு பகுதிகளில் மக்கள் பெரிய விநாயகர் சிலையை மக்கள் வழிப்பாட்டிற்காக வைக்கப்படும். அந்த வகையில் சென்னையில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த முறையும் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கூடுதலாக சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர்.


பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிப்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 4 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் மக்கள் சிரமமின்றி விநாயகர் சதுத்தியை கொண்டாடவும் சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசாரும், அதே போல் தாம்பரம், ஆவடியில் 10 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பில், “நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.trpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



  • களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பானமுறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

  • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள். வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்

  • சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச் சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

  • விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

  • மாவட்ட ஆட்சியர். காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்” என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.