தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார். இவரது இயற்பெயர் ரங்கநாதன்.


கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். 


ஓவியர் மாருதிக்கு 86 வயது ஆகிறது. இவர் இதய கோளாறு காரணமாக புனேவில் காலமானார். 




ரங்கநாதன், ஆசிரியரான டி.வெங்கோப ராவுக்கும் அவரது மனைவி பத்மாவதி பாய்க்கும் புதுக்கோட்டையில் 1938 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் தேதி மகனாகப் பிறந்தார். 


மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ரங்கநாதன் புதுக்கோட்டியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். அவரது தந்தை ஆசிரியராக இருந்ததால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.


புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி படிப்பில் சேர்ந்த ரங்கநாதன் ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.


தொடர்ந்து திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் சென்னைக்குச் சென்ற இவர் மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் சேர்ந்தார். 


திரைப்படங்களுக்கு பேனர் வரையும் வேலையையும் நாளிதழ்களில் அட்டைப்படங்கள் வரையும் வேலையையும் ஒரேநேரத்தில் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால். இவர் மாருதி என்ற புனைப்பெயர் மூலம் வரையத்தொடங்கினார். இதுகுறித்து அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். 


மாருதி உளியின் ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 


ஓவியக் கலைத்துறையைச் சார்ந்த பலரும் ஓவியர் மாருதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.