சென்னை தேனாம்பேட்டை பகுதிக்கு உட்பட்ட விஜயராகவா சாலையில்  மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் களப்பணிகளை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன், மற்றும் நகராட்சி துறை செயலாளர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது பேசிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன்,  சென்னையில் நேற்று அதிகமாக கொளத்தூரில் 15 சென்டிமீட்டர், கோடம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் என பல்வேறு இடங்களில் மழை அதிகமாக பதிவாகி இருந்தது, இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை இருந்தாலும் கூட மேற்கு மாம்பழம் தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை தற்பொழுது படிப்படியாக அகற்றி வருகிறோம் என்றார். மேலும், மழைநீர் வடிகால் பணி நடைபெற்றதால் தான் மற்ற இடங்களில் மழைநீர் தேங்காாமல் இருந்ததாக தெரிவித்தார்.






தொடர்ந்து பேசிய அவர், மழை பெய்யும் பொழுது மழைநீர் தேங்குவது உண்மை. அதன் பிறகு மழை நீரை அகற்றி வருகிறோம் எனவும், சென்னையில் இரண்டு அமைச்சர்கள் நேரடியாக களப்பணியில் இரவில் இருந்து ஈடுபட்டு வருகிறார்கள். மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்லாமல் இருந்ததால்தான் பிரச்சனை, மழை நீர் வடிகாலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது ஆனால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது என குறிப்பிட்டார்.


மேலும், “குறுகிய காலத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. முதல்வர் நிலைமையை கண்காணித்து வருகிறார். நிலவரத்தை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியாற்றி வருகின்றனர். தண்ணீர் வேகமாக வடிகிறது. 16,000 பணியாளர்கள், 491 மோட்டார்கள், கூடுதலாக 150 டிராக்டர்கள் போர்னர் மோட்ரோக்களும் களத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க எங்களிடம் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.


அதனை தொடர்ந்து பேசிய நகராட்சி துறை செயலாளர் கார்த்திகேயன், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீரை குறைக்க நடவடைக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தியாகராய நகர் பகுதியில் மிக விரைவில் சுமார் ஒரு மணி நேரத்தில் தண்ணீரை அகற்றி விடுவோம் என்றார்.


செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த அளவு தண்ணீரை வைத்துக் கொள்ளலாம் வெளியேற்றலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. டி நகர் பகுதியில் உள்ள தண்ணீர் விரைவில் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ச்சியாக தமிழக அரசு மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரிதும் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.