சென்னையில் நேற்று மிக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று மாலை சரியாக 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய நிலையில், இரவு 11 மணி மழை வரை பெய்தது. 


இதையடுத்து, இரவில் திரு.வி.க நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் மேயர் பிரியா ஆய்வு செய்தார். அதேபோல், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெரம்பூர் , கொளத்தூர் தொகுதியில் சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீரை ஆய்வு செய்தார்.






மேலும், அமைச்சர் சேகர்பாப் இன்று காலை 9.30 மணி அளவில் ராயபுரம் மண்டலம் யானை கவுனி மேம்பாலம் அருகில் கல்யாணபுரம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்தநிலையில், தற்போது ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோரிடம் நிலைமையை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். 


சென்னையில் இன்றும் மழை: 


சென்னையில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், மெரினா, மயிலாப்பூர், மந்தைவெளி, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. 


2 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு: 


கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. தாம்பரம், திருப்போரூர் பகுதிகளுக்கு தலா ஒரு குழுவும் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 குழு ந 4 குழுக்கள் புறப்பட்டது. சென்னையில் எந்த நிலைமையையும் சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு கமாண்டோ படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி தலைமையில் 56 கமாண்டோ படையினர் அனைத்து மீட்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். உயிர் காக்கும் சாதனங்கள், மிதவை வாகனங்கள் மற்றும் பிற வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது கமாண்டோ படை. 


சென்னை மழை பாதிப்பு - உதவி எண்கள் அறிவிப்பு: 


சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி. மழை பாதிப்பு - 04425619204, 04425619206, 04425619207 மற்றும் 9445477205 என்ற வாட்சப் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்தநிலையில் சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதையடுத்து, இதைபார்த்த நெட்டிசன்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு #மிதக்குது_சென்னை என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டு வருகின்றனர்.