Arikomban Elephant: அரிக் கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் மணி முத்தாறு உள்ள களக்காடு வனப்பகுதியில் விட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 


கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்றாக இருந்து வருவது அரிசிக் கொம்பம் யானை. தேனி மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கும் அளவிற்கு ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கே சவால் விட்டது அந்த ஒற்றை யானை. 


அரிசி கொம்பன் பல ஆண்டுகளாக கேரள வனப்பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள வனத் துறையினர் குழு அமைத்து ஒருவழியாகப் பிடித்தனர். இது குறித்து வனத்துறை அமைச்சர் ஏகே சசீதரன் பாராட்டுகளை தெரிவித்தார். இனி வனத்தின் அடர்ந்த பகுதியில் விடுவிக்கப்படும் அரிசி கொம்பன் கழுத்தில் ரேடியோ காலர் கட்டுப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதன் பின்னர், கேரள நீதிமன்றம் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இந்த யானையை பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதிகளில் விடுவதற்கும் அதனை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உத்தரவிட்டது. 


இந்நிலையில், கடந்த வாரம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் புகுந்த யானை மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தது. ஒருவழியாக நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை, மதுரை உயர் நீதிமன்ற கிளையில்,  களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிகளில் அரிசிக் கொம்பன் யானை விடப்பட உள்ளது என தனது தரப்பு வாதத்தின் போது கூறியது. இதனையடுத்து யானை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறில் உள்ள களக்காடு வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மணிமுத்தாறு பகுதியில் உள்ள மக்கள் மணிமுத்தாறு வனச் சரகத்தினை முற்றுகையிட்டு, யானையை களக்காடு வனப்பகுதியில் விடக்கூடாது எனவும், அங்கு விட்டால் ஒரு மணி நேரத்தில் கீழே இறங்கி விடும் எனவும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர். 


இந்நிலையில் , கேராளாவைச் சேர்ந்த ரபேக்கா ஜோசப் என்பவர் யானையை திண்டுக்கலில் உள்ள மதிகெட்டான் சோலையில் விடவேண்டும் என வழக்கு தொடுத்துள்ளார். 


அரிசி கொம்பன் பெயர் காரணம்


இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் அரிசி கொம்பன் என்ற யானை பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த யானை அரிசி மூட்டைகளை குறிவைத்து ரேஷன் கடைகளில் புகுந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு தானியங்களை தின்பதை வழக்கமாக கொண்டிருந்தது. இதனால் இந்த யானைக்கு அரிசி கொம்பன் என்ற பெயர் வந்தது.