கோயில்கள் ஒரு மதத்தின் அடையாளம் மற்றும் சனாதனத்தின் நீட்சி என சிலர் கூறி வரும் நிலையில், உண்மையில் கோயில்களின் நோக்கம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


கோயிலும், மத அரசியலும்:


கோயில் என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது, அவை காலம் காலமாக இந்துக்களின் அடையாளமாக நிலைத்து நிற்கின்றன என அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் சுயநலத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சனாதனத்தின் நீட்சி தான் கோயில் என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர். இறை வழிபாட்டிற்கு உகந்த இடம் கோயில்கள் என்பதெல்லாம் மலையேறி போக, அரசியலுக்கும், வாக்கு வங்கிக்குமான சிறந்த இடமாக கோயில்கள் தற்போது உருவெடுத்துள்ளன. இந்நிலையில் கோயில்களின் வரலாறு என்ன, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்பதை விரிவாக அறியலாம்.


கோயில்களின் வரலாறு..


உலகில் உள்ள பழமையான வழிபாட்டுத் தலங்களில் பெரும்பாலானவை, வியக்கத்தக்க கட்டுமான கலையை பிரதிபலிக்கின்றன. அப்படி, தமிழ்நாட்டில் உள்ள பெருங்கோயில்கள் தனித்துவம் மிக்கவை.  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழக நிலப்பரப்பில் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழில் சங்க கால பாடல்களிலேயே கோயில்களை பற்றிய குறிப்புகள் உண்டு.  மன்னர்களும் கோயில்களை கட்ட அதிகம் ஆர்வம் காட்டினர். பல்லவர் காலத்தில் துவக்கம் பெற்ற கோயில் கலை, சோழர் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கம்பீரத் தோற்றத்தைப் பெற்றன. பின்னர் நாயக்கர் காலத்தில் ஒரு தேக்கத்தை வந்தடைந்த கோயில் கலை, அதன் பிறகு பெரிய வளர்ச்சி எதையும் காணவில்லை.


இறைவழிபாட்டிற்கு மட்டுமே கோயிலா?


கோயில் என்றாலே இறைவழிபாட்டிற்கு மட்டும் தான் என நினைப்பதே தவறானது. கோயில்கள் பொதுமக்களின் கலாசாரத்தோடு பண்பாடு, வாழ்கை முறை, கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் சங்கமமாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கோயில் என்பது வெறும் இறைவழிபாட்டு தலமாக சுருங்கி, குறுகிய பயனை மட்டுமே வழங்கி வருகிறது. அரசியலுக்கான ஸ்தலமாகவும் உருவெடுத்துள்ளது


கோயில்களின் உண்மையான நோக்கம்..!


கட்டுமானத்தின் போதே ஊரிலேயே உயரமான கட்டிடமாக தான் கோயில் கட்டப்படும். காரணம் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் பொதுமக்கள் அங்கு தஞ்சமடையலாம். கோயில் கோபுரங்களில் நவதானியங்கள் மூட்டை கட்டி வைக்கப்படுவதன் மூலம், வறட்சியின் போது அந்த தானியங்களை பயன்படுத்தி விவசாய பணிகளை தொடங்கி உணவு பஞ்சத்த தவிர்க்க முடியும். பரதம் போன்ற கலை மட்டுமின்றி இலங்கியங்கள் போன்றவற்றை அரங்கேற்றும் ஒரு அரங்கமாக செயல்பட்டது கோயில்கள் தான். நமது சிற்பக்கலை, ஓவியக்கலை மற்றும் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு முக்கிய ஆவணமாக இருப்பது கோயில்கள் தான். வழிப்போக்கர்களுக்கு அடைக்கலமாக இருந்ததோடு, யாரும் பசியை உணரக்கூடாது என மூன்று வேளையும் தாராளமாக உணவு விநியோகிக்கப்பட்டது. வயிற்றுப்பசி நீக்கினால் மட்டும் போதாது என அறிவுப்பசிக்காக கோயில்களிலேயே நூலகங்கள் அமைக்கப்பட்டன. மருத்துவம் பார்க்க ஆதுர சாலைகள் உருவாக்கப்பட்டன. இப்படி ஒரு மனிதனுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கி, அவனது பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் ஒரு திடமான ஆவணமாக தான் கோயில் இருந்தது.


கோயில்கள் சுருங்கியது எப்போது?


இப்படி மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்திய நிலப்பரப்பில் மன்னராட்சி காலத்தில் எந்தவொரு தங்கு தடையுமின்றி நடைபெற்று வந்தன. இந்த கோயில்களுக்கு சைவம், வைணவம் என்ற அடையாளங்கள் மட்டுமே இருந்ததே தவிர, அனைத்துமே இந்துக்களின் அடையாளம் என்றெல்லாம் கூறப்படவில்லை. ஆனால், இந்தியாவில் ஆங்கிலேயேர் ஆட்சி தொடங்கியபோது தான் சைவம், வைணவம் என அனைத்து தரப்பினரும் இந்துக்கள் என பொதுவாக அடையாளப்படுத்தப்பட்டனர். அதன் பிறகு கோயில்கள் என்பது இந்துக்களின் அடையாளமாக சுருங்கியது. தொடர்ந்து உருவான ஜனநாயக ஆட்சியில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், அவற்றை கலைகளின் வெளிப்பாடு என்று கூற முடியாத சூழல் உருவாகியுள்ளது. 


கோயில்கள் என்பது வாழ்வியலின் அடையாளம்..!


இதுதொடர்பான கேள்விகள் பண்பாட்டு ஆராய்ச்சியாளர் ஏ.கே. பெருமாளிடம் முன் வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அவர், “கோயில்கள் என்பது ஒட்டுமொத்தமாக இந்து மதத்தின் அடையாளம் என்பது எல்லாம் கிடையாது. நாட்டுப்புற கோயில்கள் என்பது அந்தந்த ஊர்களுக்கான அடையாளம். உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோயில், மதுரையில் உள்ள மதுரை வீரன் கோயில், திருச்சி முனியாண்டி கோயில் என்பவை எல்லாம் அந்தந்த ஊர்களுக்கான அடையாளம் தான். பன்முகமான ஒரு பண்பாட்டுத்தன்மை அன்றைய காலகட்டங்களில் இருந்தது. அவை தான் ஆங்கிலேயர் காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்து  மதம் என அழைக்கப்பட்டது. அதன் பிறகு தான் கோயில் என்பது இந்துக்களின் அடையாளமாக உருவெடுத்தன. அப்போதும் கூட அவை கலாசாரம் மற்றும் பண்பாட்டை காப்பாற்று வகையில் தான் இருந்தன. ஆனால், இன்றைய சூழலில் அவை அப்படி இல்லை” என கூறினார்.


சனாதனத்தின் நீட்சியா கோயில்கள்?


சனாதனத்தின் நீட்சி தான் கோயில்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கோயில்கள் என்பது சனாதனத்தின் நீட்சி கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நமது நிலப்பரப்பில் கோயில்கள் இருப்பதாக சங்க இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. சனாதனம் என்று இல்லாமல் கடவுள் வழிபாடு, பண்பாடு மற்றும் நமது கலை என அனைத்தும் சங்கமம் ஆன பகுதி தான் கோயில். இந்த கோயில்களில் பல தங்களுக்கு என ஸ்தலபுரணாத்தை கொண்டுள்ளன. அவற்றை பொதுப்பண்பாட்டை கொண்டு சேர்க்க முடியாது. எல்லா சாதியினரும் கோயிலுக்குள் செல்லலாமா, கூடாதா என்பது எந்த காலத்தில் வந்தது என்பதை நம்மால் சரியாக சொல்ல முடியாது. சாதிய பாகுபாடு என்பது ஆட்சியாளர்களின் அடிப்படையிலும், கால ஓட்டத்திற்கு ஏற்பவும் மாறிக்கொண்டே இருந்ததே தவிர. குறிப்பிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டனர் என்பதெல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே.


கோயில் நமது பண்பாட்டின் அடையாளம்..


கோயிலை ஒரு மதத்தின் அடையாளமாக என்றுமே சுருக்கிட முடியாது. அவை நமது பண்பாட்டின் அடையாளம். அரசியல்வாதிகளுக்கு கோயில் பண்பாடோ, வராலாறோ, கலாசாரமோ எதுவும் தெரியாது. தமிழரின் பண்பாடு எது என்று கேட்டால் செப்பு சிலை, நடராஜர் சிலை மற்றும் கோயில்களும் தான். அதற்கு பிறகு தான் இலக்கியமே வரும். இலக்கியம் என்பது இந்தியாவிலேயே தெலுங்கு போன்ற பல மொழிகளில் உள்ளன. ஆனால், தமிழர்களின் செப்பு சிலை இந்தியாவில் யாரிடமும் கிடையாது. சிற்பங்கள் என்பவை தமிழர்களுக்கே உள்ள அடையாளம். அரசியல்வாதிகள் சோழர் வரலாறு, பண்பாட்டு வரலாறு என எதுவுமே தெரியாமல் விருப்பப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது” என ஏ.கே. பெருமாள் தெரிவித்துள்ளார். 


மொத்தத்தில் கோயில்கள் என்பது எந்தவொரு தனி மதத்தின் அடையாளம் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாட்டைடையும் விளக்கும் ஒரு வரலாற்று ஆவணம் தான் கோயில்கள் என்பதே தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது.