தமிழ்நாட்டில் கீழடியை, ஆதிச்சநல்லூர் போன்று கங்கை கொண்ட சோழபுரத்திலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால் கடந்த 14-ஆம் தேதி முதல் மீண்டும் இங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாளிகைமேடு என்ற இடத்தில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியில் ராஜேந்திர சோழனின் அரண்மனையின் இரண்டாவது பகுதி கண்டறியப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முதல் அரண்மனை கங்கை கொண்ட சோழபுரத்தில் 1980-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த இடத்திற்கு அருகே நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சியில் இந்த புதிய அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. 




செங்கற்கள் மூலம் கட்டப்பட்ட அரண்மனையின் மதில் சுவர்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு வரலாற்று ஆய்விற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலில் நிலவறை ஒன்று இருப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த நிலவறை மூலம் எளிதாக தஞ்சாவூர் செல்ல முடியும் என்ற கருத்தும் உள்ளது. 


’ஆபரேஷன் பாகுபலி’ - காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகளைத் தொடங்கிய வனத்துறையினர்..!


ஆகவே கீழடியை போல் கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால் சோழர்களின் சிறப்பை தமிழ்நாடு அரசு வெளக்கொண்டு வரலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியில் எந்தவித தொய்வும் இன்றி நடைபெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இனி வருவது பருவமழை காலம் என்பதால் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்கு வேண்டிய நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 




சோழ மன்னர் ராஜா ராஜாவின் மகனான ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு அரியணையில் அமர்ந்தார். இவர் தன்னுடைய தந்தையை விட சிறந்த மன்னராக ஆட்சி புரிந்தார். கங்கையை ஆண்ட மன்னர்கள், சாலுக்கியர்கள், ராஷ்டிரகூட மன்னர்கள் மற்றும் கலிங்க மன்னர்கள் என அனைவரையும் வெற்றி கண்டார். அத்துடன் கங்கை வரை சென்று தனது வெற்றி கொடியை நாட்டினார். அதனால் தான் இவருக்கு கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் வந்தது. இந்த வெற்றிக்கு பிறகு தான் அவர் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டினார். அவருடைய தந்தை கட்டிய தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இரண்டும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னங்களாக தமிழ்நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சின்னத்தின் அருகே ராஜேந்திர சோழனின் அரண்மனையின் இரண்டாவது பகுதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு