தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலக்கட்டத்தில் 45 ஆயிரம் டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதற்கான டெண்டர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது.  பல கெபாசிடியில் இந்த ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், அனைத்திலும் ஒரு ரூபாய் கூட மாறாமல் ஒரே விலையில் 30 ஒப்பந்தந்தாரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த டெண்டர் பணிகளில் முறைகேடு நடந்ததுள்ளது. 


சந்தை மதிப்பை விட ஒவ்வொரு ட்ரான்பார்மரும் 4 லட்சத்திற்கும் மேலாக அதிக விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு ஒப்பந்தந்திற்கு அரசுக்கு ரூ.34 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை சந்தை மதிப்பீடுகளுடன் ஒப்பீடும் போது மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த ஊழலில் முக்கிய புள்ளியாக திகழ்பவர் மின்சார வாரிய ஊழியராக உள்ள காசி என்பவர் தான்.  இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு சென்று, அங்கிருந்து மின்சார வாரிய டெண்டர்களை முடிவு செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையில் சமர்பித்துள்ளோம். 


மேலும் காசி மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கட்டாய ஓய்வுக்கான நோட்டீஸூம் 2021 ஆம் ஆண்டு மார்ச்சில் வழங்கப்பட்டது.  ஆனால் ஆட்சி மாறியவுடன் காசி மீதான தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டார். இவர் மின்சாரத்துறையில் கொள்முதல் செய்யும் பைனான்சியல் கண்ட்ரோலராக செயல்பட்டு வருகிறார். இங்கு தான் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் நடக்கிறது. 


இந்த ரூ.397 கோடி ஊழல் குற்றச்சாட்டில் காசி, மற்ற டெண்டர் ஆய்வுக்குழு அதிகாரிகள், ஒரே விலையை டெண்டரில் கொடுத்த நிறுவனங்கள், ராஜேஷ் லக்கானி, அமைச்சர் செந்தில் பாலாஜி என அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.