திமுக தரப்பில் தரணி வேந்தன் 4,96,260 வாக்குகளுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். 


நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படும். அதன்படி ஆரணி தொகுதி மீண்டும் காங்கிரஸ் கைவசமாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  


வாக்காளர்களும், வேட்பாளர்களும்:  


ஆரணி மக்களவை தொகுதியில், 14,96,118 மொத்தமாக வாக்காளர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதில், 7,34,341 ஆண் வாக்காளர்களும், 7,61,673 பெண் வாக்காளர்களும், 104 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இந்த தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாமக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆரணி மக்களவை தொகுதியில் திமுக தரப்பில் தரணி வேந்தன், பாமக தரப்பில் க. கணேஷ்குமார், அதிமுக தரப்பில் கஜேந்திரன், நாம் தமிழர் கட்சி தரப்பில் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.  


அரிசி மற்றும் பட்டு உற்பத்திக்கு பெயர்போன பகுதியாக ஆரணி திகழ்கிறது. இங்கு 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி மக்களவைத் தொகுதியானது போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதுவரை 3 மக்களவை தேர்தல்களை சந்தித்த ஆரணி தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.  


 பதிவான வாக்குகள்:


 நடைபெற்று முடிந்த தேர்தலில் 11,33,520 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 5,59,607 ஆண் வாக்காளர்களும், 5,73,874 பெண் வாக்காளர்கள், 39 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமாக 75.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில்  ஆரணி தொகுதியில் 79.01 சதவீதம்  வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


ஆரணி தொகுதியில் நிலவும் பிரச்சனைகளும் மக்களின் கோரிக்கை:


ஆரணி தொகுதியில் மக்கள் முக்கிய செய்யாறில் வேளாண் கல்லூரி அமைப்பது, தவளகிரீஸ்வரர் மலையடிவாரத்தில் கிரிவலப்பாதை அமைப்பது, மாங்கால் – காஞ்சிபுரம் சாலை 4 வழிச் சாலையாக அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதேபோல் ஆரணியில் பட்டுப்பூங்கா, ஆரணி வழியாக ரயில் பாதை திட்டம் உள்ளிட்டவை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.