திமுக தரப்பில் ஜெகத்ரட்சகன் 5,58,153 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். 


நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணம் தொகுதியில் மீண்டும் ஜெகத்ரட்சகன் வெற்றி பெறுவாரா அல்லது தொகுதி கைமாறுமா என்பது மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் விவரம்: 


அரக்கோணம் மக்களவை தொகுதியில், மொத்தமாக 15,62,871 வாக்காளர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதில், 7,60,345 ஆண் வாக்காளர்களும், 8,02,361 பெண் வாக்காளர்களும், 165 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். தமிழ்நாட்டில் 7வது மக்களவைத் தொகுதியாக இருக்கும் அரக்கோணத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது.


 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தரப்பில் ஜெகத்ரட்சகன், பாமக தரப்பில் கே. பாலு, அதிமுக தரப்பில் விஜயன் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் அப்சியா நஸ்ரின் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கபட்டனர். நடைபெற்று முடிந்த தேர்தலில், 11,59,441 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 5,73,782 ஆண் வாக்காளர்களும், 5,85,605 பெண் வாக்காளர்கள், 54 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமாக 74.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


 கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பாக இதில் பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் செய்யார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.


அரக்கோணம் தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சனைகளும் மக்களின் கோரிக்கையும்: 


திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கல்வி, தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில், அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதுதான். இந்த ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. மோசமான சாலைகள், குடிநீர்ப் பிரச்சினை போன்றவை தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கக் கூடும்.


அரக்கோணம் - சென்னை இடையிலான மூன்றாவது நான்காவது ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்கின்றன.  பாலாறு மாசடையக் காரணமாக இருக்கும் ராணிப்பேட்டை குரோமிய தொழிற்சாலையில் தேங்கியுள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது இன்னொரு முக்கியக் கோரிக்கை.