தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு  திருடப்பட்ட இரண்டு சிலைகளுக்கு உரிமை கோரும் ஆவணங்களை அமெரிக்காவைச் சேர்ந்த அருங்காட்சியகம் மற்றும் ஏல நிறுவனத்துக்கு தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அனுப்பியுள்ளது.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் விஷ்ணு, தேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக இந்துசமய அறநிலையத் துறை அலுவலர்கள் விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் 2017ஆம்ஆண்டு புகார் அளித்தனர்.


இதையடுத்து வழக்கு பதியப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. இந்த 3 சிலைகளை போல  யோக நரசிம்மர், விநாயகர், நடனம் சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்று விஷ்ணு, நடனம் கிருஷ்ணா ஆகிய 6 சிலைகளும் திருடப்பட்டன.


அடுத்தகட்ட விசாரணையில் இக்கோயிலின் இந்த ஒன்பது சிலைகளும் போலியானவை என்று தெரியவந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள இந்தோ–பிரெஞ்சு கலாச்சார மையத்தின் ஆவணங்களின் அடிப்படையில் காவல் துறையினர் சிலைகளை தேடத் தொடங்கினர்.


இந்நிலையில், ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் திருடப்பட்ட மூன்று பழங்கால உலோகச் சிலைகள், அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாக்மா அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் சில மாதங்களுக்கு முன்னர் கண்டறிந்தனர்.


இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கோயிலில் இருந்த மூன்று உலோகச் சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுதாகவும், சோமாஸ்கந்தர் சிலைக்கும், நடன சம்பந்தர் சிலைகளுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 






அதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர்,  நடன சம்பந்தர் வெண்கல சிலைகள் முறையே, ஃப்ரீயர் சாக்லர் மியூசியம், வாஷிங்டன் டி.சி மற்றும் கிறிஸ்டி ஏல இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக உலக அளவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் உள்ள இது போன்ற திருடுபோன சிலைகளைத் தேடுவதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 


இந்நிலையில், யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் மன்னார்குடி, ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயில் சிலைகள்  விரைவில் மீட்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.