அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் தற்போது சோதனை நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக தங்கமணி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருந்தவரும், அவரின் இடது கரமாக பார்க்கப்பட்டவருமான தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் தற்போது ரெய்டு நடந்து வருகிறது. முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. அது தொடர்பான விசாரணையில் தங்கமணி 4.68 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாஜி அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி சாந்தி, மகன் தரணி தரன் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தங்கமணிக்கு சொந்தமான சில சொத்துக்கள் மீது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் அந்த ரெய்டு நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 6:30 மணிக்கு தொடங்கிய ரெய்டு, தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னையில் மட்டும் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த தொழிலும் செய்யாத தங்கமணியின் மனைவி சாந்தி, வருமானவரி செலுத்தியது எப்படி என்பன உள்ளிட்ட கேள்விகளை லஞ்ச ஒழிப்புத்துறை எழுப்பியுள்ளது. அதே போல, கிரிப்டோகரென்சியில் தங்கமணி அதிக அளவில் முதலீடு செய்துள்ளதாகவும் போலீசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் மீதும், அவரது மனைவி மற்றும் மகன் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்