ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


ஈரோடு கிழக்கு இடைதேர்தல்:


திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்  நடைபெற்றது. தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு இடையே நிலவிய கடும் போட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்தது என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் மத்தியில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அந்த தேர்தல் அலுவலராக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். வேட்புமனுத் தாக்கல் முதல் வெற்றி அறிவிக்கப்பட்டது வரை சிவக்குமார் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.


லஞ்சஒழிப்புத்துறை சோதனை:


இந்நிலையில், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார்  2015- 2016 ஆண்டுகளில் சென்னை பல்லாவரம் ஆணையாளராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்  லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நேற்று பிற்பகலில், சிவக்குமார் வீட்டில் சோதனையை தொடங்கியது.


ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஆணையாளர் சிவக்குமார் வீட்டில் சோதனை  நடைபெற்றது. சோதனை தொடங்கியபோது சென்னையில் இருந்த சிவக்குமார், தகவலறிந்து ஈரோடு திரும்பி வீட்டுக்கு வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 3- மணி முதல் நள்ளிரவு 1- மணி வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக லஞ்ச ஓழிப்புத்துறையினர் தெரிவித்தனர். ஆணையாளர் சிவக்குமாரிடம் கைப்பற்றபட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணைக்கு பின்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினர். ஆணையாளர் சிவக்குமார் அதிமுக ஆட்சியில் 2015- 2016- ம் ஆண்டில் பல்லாவரம் ஆணையாளராக இருந்தால் அரசியல் காரணமாகவும் இந்த சோதனை நடைபெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு, இடைதேர்தல் முடிவடைந்த சில வாரங்களிலேயே தேர்தல் அலுவலரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.