பாரதிய ஜனதா மீதுஅவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டி, தமிழ் நாளிதழான தினமலருக்கு அக் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி அந்த நாளிதழுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


தினமலர் நாளிதழின் 23 ஜூன் 2021 தேதியிட்ட இதழில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி குறித்து செய்திவிட்டிருந்தது. அதில் ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்’எனக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றைப் பதிப்பித்திருந்தது. 




இந்தச் செய்தி குறித்துக் கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா தினமலர், நாளிதழுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸை அனுப்பியது. அதில், ‘உங்களுடைய ஊடகத்தின் 23 ஜூன் 2021 தேதியிட்ட நாளிதழில் ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம் ’ எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆதாரமில்லாத இந்தச் செய்தியை நிருபரின் பெயரில் எழுதாமல் ’நமது நிருபர்’ என்கிற பெயரில் பதிப்பித்திருந்தீர்கள். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான உங்களது இந்தச் செய்தியால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தேசிய, சர்வதேச அளவில் உள்ள எங்கள் கட்சியினரும் பொதுமக்களும் கொந்தளித்துள்ளார்கள். அதனால் நிர்வாகம் தனது இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று கட்சியிடம் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையென்றால் 100 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தினமலர் நாளிதழுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற பாஜகவின் கட்சி கூட்டம் குறித்து, தினமலர் சென்னை பதிப்பில் வந்த கட்டுரையை பார்த்தேன். நிஜமாக அது சிந்தன் பைடக் ஆகும். 




அந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது என்றால், நடைபெற்று முடிந்த தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் எங்களின் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியை வலிமைப்படுத்துவது குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதற்கு மட்டுமே. எங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதித்தோம். எங்கள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் ‘ஒருங்கிணைந்த மதச்சார்பற்ற மனித நேயம்’ என்ற கனவில் பாஜக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இறுதியில் திமுகவின் நிர்வாகத்தை குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும் பேசினோம். ஆனால், அந்த கூட்டத்தில் ஒரு தலைவரை பற்றி பேசியதாக, உங்கள் பத்திரிகையில் உண்மைக்கு மாறான செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த தலைவரை பற்றியும் பேசவில்லை. உங்களின் செய்தியை மறுக்கிறேன். பாஜக தலைவராக உங்களின் நாளிதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நான் பேசவில்லை என்று மறுமுறை உறுதியாக கூறிக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.