கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு அளவீட்டில் உரிமம் வழங்குவது, தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் துணை ஆய்வாளர் தங்கையன் என்பவர் பொறுப்பில் உள்ளார். இவர் பெட்ரோல் பங்குகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் பெற்று வருவதாக புகார் உள்ளது. 


 




 


இந்த நிலையில் கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றின் மீது இருந்த வழக்குகளை முடித்து தருவதற்காக லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


 




 


அந்த புகாரின் பேரில் கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமார் ஐந்து பேர் தொழிலாளர் அலுவலகத்தில் வைத்து துணை ஆய்வாளர் தங்கையனை கைது செய்து, அவரிடம் இருந்த கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணை முடிந்த பின்பு தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையினை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையன் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.