கோவை, கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். 


அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், “ஒவ்வொரு பொருட்களுக்கும் விதவிதமாக ஜிஎஸ்டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னிற்கு ஜிஎஸ்டி கிடையாது. அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பன், க்ரீம் தந்தால் நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். அனைத்திற்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டியை வைத்து விடுங்கள். வானதி சீனிவாசன் வடநாட்டில் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறார்கள் என்பதால் ஸ்வீட்டிற்கு 5 சதவீதமும், காரத்திற்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்கிறார். தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காபி அதிகமாக போகும். இவற்றுக்கு ஒரே மாதிரி ஜிஎஸ்டி போடுங்கள். ஜிஎஸ்டி போடுவதில் கணினியே திணறுகிறது” எனத் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.


இந்த நிலையில், நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத்தன் கேள்வியை முன்வைத்தேன்' என்று அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.


குவியும் கண்டனங்கள்


இந்த நிலையில் நிதி அமைச்சரிடம் தொழிலதிபர் மன்னிப்பு கேட்டாரா? கேட்க வைக்கப்பட்டாரா என்னும் கேள்வியை முனவைத்து கண்டனங்கல் குவிந்து வருகின்றன.


தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது


இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, ‘’பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ - குறள் 978, அதிகாரம் 98 ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜோதிமணி எம்.பி.


’’கோவை அன்னபூர்ணா உணவக நிறுவனர் சீனிவாசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது. வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம்,பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.


அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு?உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.


நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும்.அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.