இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப எளிமையான விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அது பிறருக்கு அறிவுரை சொல்வது. அதாங்க நம்ம இலியானா சொல்லுவாங்களே... ஃப்ரீ அட்வைஸ் கேட்டா கேட்டுக்கோ.. இல்லாட்டி விட்ரு. அதே வகையறா அட்வைஸ் தாங்க. காசா, பணமா சும்மா அள்ளிவிடலாம்.


அப்படியொரு அட்வைஸை அன்னபூரணி அம்மா.. அட நம்ம அன்னப்பூரணி அம்மா சொல்லியிருக்காங்க..
மனசக்தியால் எல்லாம் முடியும்... இதுதாங்க போஸ்ட்டோட டைட்டில்.
இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. அது எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் அது உங்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் மனமே உங்களின் இப்போதைய வாழ்க்கையை உருவாக்கி இருக்கிறது.


உங்கள் மனம் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றலாகும். அதை வைத்து நீங்கள் எப்படி வாழவேண்டுமோ அப்படியே  உங்கள் வாழ்க்கையை உருவாக்கி கொள்ள முடியும். இதுவே மனம்போல் வாழ்வு என்பதாகும். உங்கள் மனசக்தியை ஒருமுகப்படுத்தி அதை சரியாக பயன்படுத்தும் சூட்சுமம் உங்களுக்கு தெரிந்தால் அதன்மூலம் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். தண்ணீரில் நடக்கவும் காற்றிலே பறக்கவும் உங்களால் முடியும்.
இவை அனைத்தும் உங்கள் ஆணவம் மனசக்தியை பயன்படுத்தும் விதமே. ஆணவ விளையாட்டே.நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே உன்னால் ஆக முடியும் உன் மனசக்தியால். ஆனால் நீயாக மட்டும் ஆக முடியாது. அதற்கு நீ உன்னுடைய ஆணவத்தையும், மனதையும் விடுத்து உணர்வில் நிலைபெற வேண்டும். உணர்வே அமைதியும், ஆனந்தமும், அறிவும், இருப்புமாக இருக்கிறது. 


மனதில் சிக்கிக் கொண்ட ஒருவனுக்கு இதுபற்றி புரிந்து கொள்ள முடியாது. மனதை ஒதுக்கிவைத்தால் அல்லது மனதை கடந்தால் அல்லது மனதை அமைதி அடைய செய்தால் அல்லது மனதை அழித்தால் இப்படி எல்லாம் கூறும் நிலை இதுவே.மனதை அழிப்பது என்பதே கிடையாது அதை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் பயன்படுத்த முடியும். 
ஆணவம் வேறு மனம் வேறு அறிவு வேறு உணர்ச்சி வேறு உணர்வு வேறு என்பதை தெளிவாக   புரிந்து கொள்ளுங்கள். அறிவையும் மனதையும் இயக்க  மற்றொன்று தேவை அதுவே உங்கள் ஆணவம். ஆனால் உணர்வை இயக்க எதன் துணையும் தேவையில்லை. சூரியனை அறிய மற்றொரு விளக்கு எப்படி தேவையில்லையோ அது போன்றே உணர்வும் தன்னைத்தானே உணரக்கூடியது ஆகும்.




உணர்வில் நிலைபெறுதலே மனம் கடந்த நிலை அதுவே முக்தி நிலை அதுவே ஆணவமற்ற நிலை அதுவே மரணமில்லா பெருவாழ்வு.மனதில் சிக்கிய உனக்கு மனசக்தியால் நீ நினைத்த வாழ்வை தரமுடியும் ஆனால் மரணமில்லா வாழ்வை தர முடியாது. 


ஆன்ம அனுபவத்தை சிறிது அனுபவித்திருக்கலாம் ஆனால் அதில் நிலைபெற முடியாது. உன் இப்போதைய பிறப்பிற்கு மனசக்தியே காரணமாகிறது அதால் பிறவாநிலையை தரமுடியாது. மனதில் சிக்கிக்கொண்டு உணர்ச்சிகளில் உழன்று கொண்டு உங்கள் வாழ்வை வீணடிக்காதீர்கள். உணர்வில் நிலைபெறுங்கள் உங்கள் இயல்பான அமைதியிலும் ஆனந்தத்திலும் வாழ்வை கொண்டாடுங்கள்.
முழு போஸ்ட்டையும் படிச்சிட்டீங்களா.. ஆரம்பத்தில் அன்னபூரணி அம்மா இந்த உலகுக்கு ஏதோ சொல்ல வருகிறார்கள் என்று படித்தால், மூன்றாவது பத்தியிலேயே 'ஆணவம்' என்று ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை ஈகோவைப் பற்றி பேசியிருக்கிறாரோ! பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டார் என்று வடிவேலு சொல்லும் காமெடி நினைவுக்கு வராமல் இல்லை. அன்னப்பூரணியின் லேட்டஸ்ட் அட்வைஸை இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். 


யார் இந்த அன்னப்பூரணி...
போஸ்ட்டப் பத்தி சொன்னீங்க புதுசா படிக்குற எங்களுக்கு யாரு அன்னபூரணின்னு சொல்லுங்க என்று கேட்பவர்களுக்காக. ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்ற பெயரில் அன்னபூரணி என்ற பெண் செங்கல்பட்டில் அருள்வாக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ம் தேதி நடக்க இருந்த அன்னபூரணியின் அவதார அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர். இவரின் அருள்வாக்கு வீடியோக்கள் இணையத்தில் பரவி சர்ச்சையானது. பல்வேறு இந்து அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவரின் இரண்டாவது கணவர் அரசு மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக  சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை இன்னும் வலுவடையச் செய்தன. இப்போது நம்மூர் சாமியார்கள் பட்டியலில் பெர்ஃபெக்டாக ஃபிட்டாகிவிட்ட அன்னபூரணி அரசு அம்மா.!!