சித்ரா பௌர்ணமி -2024 முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


சித்ரா பௌர்ணமி குறித்து ஆய்வு கூட்டம் 


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வருடமும் சித்ரா பெர்ணமி 23.04.2024 (நாளை மறுநாள்) அதிகாலை 04.16 மணியளவில் தொடங்கி 24.04.2024 அன்று அதிகாலை 05.47 மணியளவில் நிறைவடைகின்றது. இந்த வருடமும் பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்கிளிருந்தும், மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பக்தர்கள் தொடர்ந்து சுவாமியை தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி ரூ50க்கான சிறப்பு கட்டண சேவை வசதி இரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு இராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு, தரிசனம் முடிந்து, தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியே வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இலவச குளியல் கழிவறை  வசதிகள்  


மேலும், கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், கைகுழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய இராஜகோபுரத்தில் இருந்து வடக்கு 5-ம் பிரகாரத்தில் அனுமதிக்கப்பட்டு, வடக்கு அம்மணி அம்மன் கட்டை கோபுரம் வழியாக கிளிகோபுரம் உள்ளே உள்ள துலாபாரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள க்யூ லைன் வழியாக சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பேட்டரி கார் மூலம் மேற்கு பேகோபுரம் கட்டை கோபுரம் வரை அழைத்து வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்யவும் நீர் மோர், பால் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு திருக்கோயில் மூலமும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில் திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.




கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருத்தல் 


 


பொது தரிசன வழி சிறப்பு தரிசன வழி திருமதில் வெளிப்புறம் - தற்காலிக நிழற்பந்தல் தேங்காய் நார் தரைவிரிப்பு  மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வெயில் காரணமாக பாதம் வெப்ப பாதிப்பு ஏற்படாமல் இருக்க திருக்கோயிலில் உள்ள க்யூ வரிசையில் நகரும் தடுப்பான்களுக்கு கீழும் வெள்ளை  அடித்தல் பாதுகாப்பு கருதி தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் தேவையான இடங்களில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், முக்கியமான இடங்களில் எல்இடி மெகா ஸ்கீரின் அமைக்கப்படவுள்ளது. மருத்துவ துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல் 108 அவரச கால ஊர்தியினை திருக்கோயில் உள்ளேயும், வெளியேயும், கிரிவலப்பாதையில் தயார் நிலையில் வைத்திருத்தல், தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தற்காலிக பேருந்து நிலையங்கள் மின்விளக்குகள் கிரிவலம் செல்லும் பக்கதர்கள் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் திரும்ப அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் வகையில் தகவல் பலகை அமைத்தல், 14 கி.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்கவும் மற்றும் இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படவும், கோயிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும்.




கிரிவலம் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை காத்திட வேண்டும் 


 


சித்ரா பௌர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை சார்பில் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டு வழங்கவும், அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருக்கோயிலில் தேவையான அளவில் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மண்டல இணை ஆணையர் சுதர்சனன், அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்  ஜோதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.