இடதுசாரி கட்சியின் அலட்சியத்தால் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் பல சிரமங்களை சந்தித்து வருவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு, அங்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சணக்கான பக்தர்கள் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது. மேலும், பெண் பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் சிலர் சாமியை தரிசிக்காமல் திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சபரிமலையில் கட்டுக்கடங்காமல் வரும் பக்தர்களின் நிலைக்கண்டு வருத்தமளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும், நாத்திக இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதைப் பார்ப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.
இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் மோசமான நிர்வாகத்தால் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒருபுறம், பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை; மறுபுறம், ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம் மற்றும் சுப்பிரமணிய மத அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தங்கள் தன்னார்வ ஆதரவை வழங்குவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.
சபரிமலை வெறும் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; அது நம் நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக மையமாகும். ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது, அதன் பொறுப்பை நேர்மையுடனும் மரியாதையுடனும் நிலைநிறுத்துவதாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஸ்பாட் புக்கிங்
முன்னதாக, சபரிமலை வரும் பக்தர்களுக்கு அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது வரும் (24ஆம் தேதி) திங்கட்கிழமை வரை ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 5,000 ஆகக் குறைத்துள்ளனர். ஸ்பாட் புக்கிங்கில் தினமும் 20,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த அதனை குறைந்துள்ளனர். பக்தர்கள் வனத்துறையிடமிருந்து பாஸ்களைப் பெற வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த பாஸ்களைப் பெறுவதற்கான நடைமுறை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், அதிகாரிகள் ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதித்தனர். .அந்த நேரத்தில் 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால், கூட்ட நெரிசல் கட்டுப்படுத்துவது மேலும் கடினமாக இருந்தது. கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களுக்கு மறுநாள் தரிசனம் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் வருகையை எளிதாக்க, நிலக்கல்லில் ஏழு கூடுதல் முன்பதிவு மையங்கள் செயல்படத் திட்டமிடப்பட்டன. மேலும் சன்னிதானத்தில் வரிசைகள் சீரமைக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பம்பாவிலிருந்து ஆம்புலன்சுக்கு எந்த உதவியும் கிடைக்காததால் பம்பாவிலிருந்து பத்தனம்திட்டாவிற்கு அனுப்பப்பட்டனர். பத்தனம்திட்டாவிலும் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.