ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக கூறிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். இதனை திமுக மறுத்த நிலையில், அண்ணாமலைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இந்நிலையில்,  இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை மீது  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ்.பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக தெரிவித்தார். இதை மறுத்துள்ள அண்ணாமலை அவதூறாக பேசிய புகாரில் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


மன்னிப்பு கேட்காவிட்டால்,  500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை மறுத்தால், ஆர்.எஸ்.பாரதி மீது கிரிமினல், சிவில் வழக்கு தொடுக்கப்படும் எனவும்  நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலைக்கு தொடர்பு இல்லை என வழக்கறிஞர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். 


முன்னதாக அண்ணாமலை திமுக சொத்து பட்டியல் எனக்கூறி வெளியிட்ட பட்டியலை அடுத்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி : அண்ணாமலை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை எப்படி காவல் துறையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.



அண்ணாமலை யார் யார் மீது குற்றம்சாட்டியுள்ளாரோ, அவர்கள் அண்ணாமலை மீது வழக்கு தொடருவார்கள். இனிமேல், பாஜகவுக்காக சுற்றுப்பயணம் செய்வதைவிட, நீதிமன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருக்கும். அண்ணாமலை ரபேல் கடிகாரம் தொடர்பாக, ரசீதுக்கு பதில் சீட்டு காட்டுகிறார். பணம் கட்டி வாங்கினால் பில் தருவார்கள். ஆனால், அவர் சீட்டைதான் காட்டினார் என்றார். 




திமுக இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளது. 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது, சொன்னவர்கள் நிரூபித்துள்ளார்களா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால்கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவைவிட அண்ணாமலை ஒன்றும் அறிவுலக மேதையோ, ஆளுமைத்திறன் உள்ளவரோ இல்லை என்றார். ரூ.3,418 கோடி மதிப்பில் பள்ளிகள் உள்ளதாகவும் ரூ.34,184.71 கோடியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றுக்கான ஆவணங்களை அவர் 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.



ஏழை மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கமலாலயத்துக்கு சென்று மறியல் செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி பணம் ரூ.2,000 கோடியில் ரூ.84 கோடியை அண்ணாமலையும், அவரது சகாக்களும் பெற்றுள்ளதாக பொதுமக்கள், கட்சியினர் கூறி வருகின்றனர். தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப, இன்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நாங்கள் ஒன்றும் பழனிசாமியோ, வேலுமணியோ இல்லை. பட்டியல் வெளியிடுவதாக அவர்களையும் அண்ணாமலை பயமுறுத்துகிறார். எவ்வளவு ‘டீல்’ பேசுவார் என்பது தெரியவில்லை. ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை நிச்சயம் உள்ளே போகப் போகிறார். திமுக சொத்து தொடர்பாக, முதல்வர் அனுமதியுடன் வழக்கு தொடர்வேன் என்றார்.