Ponmudi On Vijay: உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விஜயை விமர்சித்த பொன்முடி:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை, ஒட்டுமொத்த திமுகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அபோது, “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் பற்றி பேசாமல் அரசியல் பேசுகின்றனர். அம்பேத்கரை பற்றி ஏதாவது தெரிந்தால் தானே அவர்கள் பேசுவதற்கு. வாரிசு அரசியல் என்று பேச என்ன தகுதி உள்ளது? மன்னராட்சி, வாரிசு குறித்து பேச தகுதி இருக்கிறதா? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் கொள்கை இருந்தது. விஜய்யின் படங்களில் கொள்கை இல்லை. எதிர்காலத்தில் தமிழ்நாட்டை வழிநடத்தும் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார்” என்றுபொன்முடி தெரிவித்துள்ளார்.
விஜய் பேசியது என்ன?
கடந்த வெள்ளியன்று “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விஜய், “கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது” என்று பேசினார். முன்னதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது” என வலியுறுத்தி இருந்தார்.
விஜயை முற்றுகையிடும் திமுக
விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துணைமுதலமைச்சர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பியபோது, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்றதோடு, ஆதவ் அர்ஜுனாவிற்கு அந்த அளவிற்கு கூட அறிவில்லை என ஒருமையில் ஆவேசமாக பேசினார். இதேபோன்று திமுக எம்.பி., கனிமொழி, அமைச்சர் சேகர் பாபு என பலரும் விஜயை கடுமையாக வசைபாடியுள்ளனர். இதனிடையே, விசிகவினரும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.