கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நேற்று தமிழக காவல்துறை தலைமையகத்திலிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. இது தமிழக காவல்துறை டிஜிபியாகிய சைலேந்திர பாபு அவர்களின் ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும் இந்தாள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைபட்டுள்ளேன் என்றார்.






நான் பல கருத்துக்கள் கூறி விசாரணையின் போக்கை திசைதிருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில், ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம்.


அதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை; டிஜிபி சைலேந்திர பாபு அவர்களே, நீங்கள் ஒரு காவல் அதிகாரி தானே தவிர, தங்களை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம். விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துக்கள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நான் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு:


1. 22ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது, 23ஆம் தேதி மதியம் இதை பற்றி பதிவிட்டிருந்த நான், காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன் மற்றும் இந்த வெடி விபத்தில் இருக்கும் மர்மத்தை காவல்துறை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.


2. 23ஆம் தேதி இரவு, நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை. இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?


3.சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பின்னரும் காவல்துறையிடமிருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ, எவ்வித தகவலும் வராததால், 24ஆம் தேதி இரவு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 30 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதை பற்றி பேச மறுப்பது ஏன் என்ற  கேள்வியை முன்வைத்தேன்.


மேலும் அவர் தெரிவித்ததாவது, ”இன்றுடன் இந்த சம்பவம் முடித்து 7 நாட்கள் ஆகியிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மௌனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்த துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?" என்றார்.


தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மெளன நிலையில் இருப்பதால்,  பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகளை முன் வைத்தோம், அதாவது ”தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் காவல்துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்?. இதுவரை இது ஒரு தீவிரவாத சதி செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்?  என்றார்.


இதில் விசித்திரம் என்னவென்றால் நேற்று நீங்கள் கொடுத்த பத்திரிகை செய்தியில் தற்கொலைப்படை நடந்தது என்றோ தீவிரவாத சதிச்செயல் என்றோ குறிப்பிடப்படவில்லை. இப்போது தான் சிவிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்புக்கு தமிழக காவல்துறை முன்னேறியுள்ளது இதை தீவிரவாத தாக்குதல் என்றோ தற்கொலைப் படை தாக்குதல் என்றோ குறிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என தெரிவித்தார்.


”சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள்”


மேலும் அவர் கூறியதாவது, ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்திடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளதே என்பதில் வருத்தமே. வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு, இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன்” என்றார்.


கூடுதல் தகவல்களுக்கு, முழு அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


காவல்துறை வைத்த குற்றச்சாட்டு: தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.