பிரதமர் மோடி தமிழ்நாடு மக்களின் அன்புக்கு பாத்திரமாகி உள்ளார் என்றும், வாரணாசியில் காசி தமிழ் சங்கத்துக்கு வருகை தரும் தமிழ் மக்களை வரவேற்க 19ம் தேதி கட்டாயம் தான் இருப்பேன் என பிரதமர் மோடி கூறிச்சென்றுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (நவ.12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


பிரதமர் நெகிழ்ச்சி


”பிரதமர் நரேந்திர மோடி, மதுரை திண்டுக்கல் பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட அரை நாள் இருந்தார். நேற்று இரவு சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் சந்தித்து விட்டு டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.


கடந்த இரண்டு நாள்களில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இங்கே வந்து எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்துள்ளனர். குறிப்பாக நேற்று மதுரை திண்டுக்கலில் தமிழ் மக்கள் கொடுத்த உற்சாகமான வரவேற்பை பா.ஜ.க. என்றைக்குமே மறக்காது. கட்சிக்காக அவர் இத்தனை ஆண்டுகளாக உழைத்த உழைப்பின் வெளிப்பாடாக நேற்று கொட்டுகிற மழையில் கைக்குழந்தையோடும் பலர் பிரதமரைக் காண காத்திருந்தனர்.


அந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பார்த்ததும், பிரதமர் உடனடியாக காரைத் திறந்து வெளியே வந்து, தொண்டர்களையெல்லாம் பார்த்தபடி, அந்த ரோடு முழுவதும் பிரதமரும் நனைந்தபடி வந்திருந்த அனைவரது வரவேற்பை ஏற்று கையசைத்தபடி சென்று, மகாத்மா காந்தி காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.


பாஜகவினரை உற்சாகமூட்டிச் சென்ற அமித்ஷா


மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது. மீண்டும் பிரதமர் திண்டுக்கலில் இருந்து மதுரைக்கு வாகனத்திலேயே திரும்பினார். போகும்போதும் ஆங்காங்கே கிராமங்களில் மக்கள் மிகுந்த வரவேற்பை அளித்தனர். இன்று அதேபோல் அமித் ஷா பா.ஜ.க. அலுவலகத்துக்கு வந்து அலுவலர்களை சந்தித்து விட்டு உற்சாகமூட்டி சென்றுள்ளார்.


தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் மீது பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக பிரதமர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு மக்களின் அன்புக்கு அவர் பாத்திரமாகி உள்ளார். பிரதமர் திண்டுக்கலில் பேசும்போது மிக முக்கியமாக மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காசி தமிழ் சங்கமத்தைப் பற்றி எடுத்துக்கூறினார். வரும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.


காசி தமிழ் சங்கமம்


இந்நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 2400 பேர் 12 ரயில்களில் வேறு வேறு குழுக்களாக காசிக்கு செல்கிறார்கள். இதில் மிக மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த முதல் குழு வாரணாசிக்கு வரும்போது அவர்களை வரவேற்க தான் அங்கே இருப்பேன் என நேற்று பிரதமரே தெரிவித்தார்.


”19ஆம் தேதி வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில் நானும் பங்கு பெறுவேன், இத்தனை தமிழர்கள் இங்கிருந்து என்னுடைய தொகுதிக்கு வருகிறார்கள், நான் பிரதமராகவும், வாரணாசி எம்பியாகவும் அங்கிருந்து அவர்களை வரவேற்று தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றக்கூடிய அனைத்து விஷயங்களையும் நான் கண்டுகளிக்கப்போகிறேன்” என பிரதமரே  நேற்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.


”காசி மக்களுக்கு இது குறித்து எடுத்துச் சொல்லப் போவதில் நான் பெருமையடைகிறேன்” என பிரதமர் தெரிவித்தார்.


உள்துறை அமைச்சர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75ஆம் ஆண்டு விழாவில் இன்று பங்கேற்று, ஆட்சிக்கு வந்த பின் பாஜக தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தது என்பது குறித்து பேசினார்.


தமிழ் வழிக் கல்வி


இந்த உலகத்தின் தொன்மையான, பழமையான மொழி நம் தாய் மொழி தமிழ் தான். தமிழின் தொன்மையை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை அல்ல, இந்தியர்களின் கடமை என்றார்.


மேலும், குறிப்பாக இந்தியாவில் சில மாநிலங்களில் மருத்துவ, தொழில்நுட்பக் கல்விகளை தாய் மொழியில் பயிற்றுவிக்கத் தொடங்கியுள்ளார்கள், நீங்களும் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் முழுமையாக மருத்துவக் கல்வியை வழங்குங்கள் என்றார். தமிழ் வழியில், தாய் மொழியில் படிக்கும் மாணவர்களின் சிந்தனை சிதறாமல் அவர்கள் ஆராய்ந்து படிக்க இது ஏதுவாக இருக்கும் எனக் கூறினார். 


அதே நேரம் அமித் ஷா மற்றொரு கருத்தையும் முன்வைத்தார். 2010ஆம் ஆண்டே தொழில்நுட்பக் கல்வியை தமிழ் வழியில் கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு 1350 பொறியியல் சீட்டுகள் உள்ளன. ஆனால் லட்சக்கணக்கான  பொறியியல் படிக்கும் மாணவர்களில் வெறும் 50 பேர் தான் தமிழ் மொழியை பயிற்று மொழியாக எடுத்து படிக்கிறார்கள்.


”உலகத்துக்கே தாய் மொழியின் கர்வத்தை எடுத்துச் சொல்லக்கூடிய மாநிலமான தமிழ்நாட்டில் இப்படி இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மாநில அரசு முயற்சி எடுத்து தமிழ் வழியில் படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என அமித் ஷா கோரிச் சென்றுள்ளார். அமித் ஷா தாய் மொழியை தான் பிரதான மொழியாக வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் என்றார் அண்ணாமலை.